தாயைக் கொன்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இளையர்மீது பாட்டியையும் கொன்றதாக வழக்கு

தாயைக் கொலை செய்ததாக ஏற்கெனவே குற்றம் சுமத்தப்பட்டு உள்ள கேப்ரியல் லியன் கோ என்பவர் மீது அவருடைய பாட்டியின் மரணம் தொடர்பில்,  கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. 

கேப்ரியலுக்கு இப்போது வயது 22. அவர் லீ சோ முய், 56, என்ற தனது தாயாரையும் 90 வயதான தனது பாட்டியையும் கொலை செய்ததாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்நோக்குகிறார். 

காமன்வெல்த் அவென்யூவில் உள்ள 7ஏ புளோக்கின் ஏழாவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டில் திருவாட்டி லீ இறந்துகிடந்தார். 

90 வயது பாட்டி, பக்கத்து வீட்டில் கிடக்கக் காணப்பட்டார். அந்தப் பாட்டி காயங்கள் காரணமாக மரணம் அடைந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

அக்டோபர் மாதத்தில் தீபாவளி வார முடிவின்போது இரண்டு கொலைக் குற்ற வழக்குகள் இடம் பெற்றன. அவற்றில் கேப்ரியலின் வழக்கு ஒன்று. குற்றவாளி என்று தீர்ப்பானால் கேப்ரியலுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.