நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு 17 மாதச் சிறை

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திடமிருந்து (என்டியு) $191,000 தொகையை ஏமாற்றிப் பறிக்க சதி செய்த பெண்ணுக்கு 17 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

என்டியுவின் முன்னாள் இயக்குநரான செங் சூன் ஹெங்குடன் சேர்ந்து 43 வயது லூயிஸ் லாய் பெய் சியன் சதி வலை பின்னியதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது தமது கணவரைப் பயன்படுத்தி என்டியுவை அவர் ஏமாற்றினார்.

தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து மோசடி குற்றச்சாட்டுகளைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான I-KnowHow நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான லாய் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்போது மேலும் 10 மோசடிக் குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. லாயின் நிறுவனத்துக்காக செங் வர்த்தக வாய்ப்புகளைத் தேடுவது, வர்த்தக முடிவுகளை எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

செங்கின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த என்டியுவின் துணை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய லாயின் நிறுவனம் அவற்றுக்கான ஏலக்குத்தகைகளில் பங்கேற்றது. லாயின் நிறுவனத்துடன் செங் நெருக்கமானவர் என்பதால் இந்தச் செயல் முறையற்றதாகும்.  லாயின் நிறுவனத்துடன் செங்கிற்குத் தொடர்பு இருந்தபோதிலும் அவரை அந்த நிறுவனத்தில் இயக்குநராகவோ பங்குதாரராகவோ பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்டியு தொடர்புடைய வர்த்தகங்களில் மட்டும் லாயின் நிறுவனம் கவனம் செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட திட்டத்துக்கான வேலையைத் தமது நிறுவனம்தான் செய்தது என்று கூறி என்டியுவின் துணை நிறுவனத்திடம் லாய் மானியம் பெற்றுக்கொண்டார். ஆனால் அந்தத் திட்டத்துக்கான வேலையை செங்கின்கீழ் பணிபுரிந்த ஒருவர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்டியுவுக்கு ஆலோசகராக லாய் செயலாற்றியபோது தமது கணவர் திரு வோங் சீ லோங்கை தமது உதவியாளராக அவர் காட்டிக்கொண்டார். அதற்கான ஆறு மாத சேவை ஒப்பந்த்தில் தமது கணவரைக் கையெழுதத்திட வைத்தார்.

செங்கிற்கு எதிரான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அவருக்கு எதிராக 120 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

Loading...
Load next