அங் மோ கியோ நகர மன்ற முன்னாள் நிர்வாகிக்குச் சிறை

அங் மோ கியோ நகர மன்ற முன்னாள் நிர்வாகிக்குச் சிறை

1 mins read
eb6a9d2a-d2f8-4703-86f7-fb3f1f89c79a
வோங் சீ மெங் (இடம்) ஒப்பந்தக் குத்தகை வழங்குவதில் சியா சின் லான் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்துகொண்டார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அங் மோ கியோ நகர மன்றத்தின் முன்னாள் பொது நிர்வாகிக்கு ஊழல் குற்றச்சாட்டில் 27 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திரு வோங் சீ மெங், 59, இரு கட்டுமான நிறுவனங்களின் இயக்குநரிடமிருந்து 50,000 வெள்ளி கையூட்டுப் பெற்றார்.

இரு நிறுவனங்களின் இயக்கு நரான சியா சின் லானுக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரு நிறுவனங்களுக்கும் தலா 75,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த வழக்கில் இருவரும் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.

வோங்கும் சியாவும் 75,300 வெள்ளி தொடர்பிலான தலா மூன்று குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கினர்.

முதல் குற்றச்சாட்டு, 19-ஏஎன்சி கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான 'டொயோட்டா கரோல்லா ஆல்டிஸ்' காரை வோங்குக்கு $13,500 கழிவுடன் விற்கப்பட்டதாகும்.

வோங்கின் கள்ளக் காதலிக்கு 27,800 வெள்ளி வழங்கப்பட்டது இரண்டாவது குற்றச்சாட்டு.

கரவோக்கே கூடம், உடற்பிடிப்பு நிலையங்கள் போன்ற பொழுதுபோக்குகளுக்காக வோங்குக்கு 34,000 வெள்ளி வழங்கப்பட்டது 3வது குற்றச்சாட்டு.

இந்த மூன்று குற்றச்சாட்டுகளைத் தவிர வோங் மீது சுமத்தப்பட்ட மேலும் இரு குற்றச் சாட்டுகளையும் தண்டனை விதிக்கப்படும்போது நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

வோங்குக்கு சியா வாங்கித் தந்த இலவச தொலைபேசி இணைப்பு, அவரது மருமகளுக்கு வேலை வாங்கிக்கொடுத்தது ஆகியன இதர இரண்டு குற்றச் சாட்டுகளாகும்.