மேம்பாலம் இடியும் முன்னரே வடிவமைப்பு தவறுகள் பொறியாளருக்குத் தெரியும்

மேம்பாலக் கட்டுமானப் பணிகளுக்கென நியமிக்கப்பட்ட பொறியாளர்,  வடிவமைப்பில் தவறுகளும் கட்டமைப்புக் கோளாறுகளும் இருப்பது தெரிந்தும் அவற்றைக் களைவதற்கான எந்தவொரு நடவடிக்கை யையும் அவர் மேற்கொள்ளவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ராபர்ட் அரியான்டோ ஜன்ட்ரா, 46, எனப்படும் அவர் பாலங்களை வடிவமைப்பதில் தமது பொறியாளர் குழு அனுபவம் பெற்றிருக்கவில்லை என்பதையும் தெரிந்து வைத்திருந்தார். 

இருப்பினும் அந்தக் குழுவுக்குப் போதுமான ஆலோசனைகளை வழங்கி அதனை அவர் வழிநடத்தத் தவறியதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

2017 ஜூலையில் தீவு விரைவுச்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்தோனீசியரான அரியான்டோ சிங்கப்பூர் நிரந்தரவாசி என்பதோடு பாலம் கட்டுவதற்கான துணை குத்தகையாளர் சிபிஜி கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்திற்காகப் பணியாற்றிய பொறியாளரும் ஆவார். 

இத்தகைய பொறுப்பற்ற போக்கு காரணமாக மேம்பாலம் இடிந்து விழுந்ததில் சீன நாட்டைச் சேர்ந்த சென் யின்சுவான், 31, என்னும் ஊழியரின் உயிர் பறிபோனதோடு 10 பேர் காயமுற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட கட்டுமானப் பகுதியில் பணியிலிருந்த இந்த 11 ஊழியர்களும் குறைந்தபட்சம் 9 மீட்டர் உயரத்திலிருந்து தரையில் விழுந்தார்கள்.

இவ்வழக்கில் கட்டுமானக் கட்டுப்பாட்டுச் சட்டம், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுகளை அரியான்டோ எதிர்நோக்குகிறார். பாலம் இடிந்த சம்பவத்தில் ஆக அதிகமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர் இவர். 

நேற்றைய விசாரணையின்போது ஐந்தில் மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

ஐந்து வடிவமைப்புப் பொறியாளர்களுக்கு இவர் தலைமை தாங்கியதாகவும்  தீவு விரைவுச்சாலை மேம்பாலத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இடைத்தூண்களை வடிவமைப்பது தொடர்பான பால வடிவமைப்புகளில் இந்தப் பொறியாளர்கள் இதற்கு முன் ஈடுபட்டதில்லை அல்லது குறைந்த அனுபவம் பெற்றிருந்தார்கள் என்பதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தவறுகளைப் புறந்தள்ளியதோடு கட்டமைப்புப் பணிக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தில், எல்லாம் சட்டப்படி தயாரிக்கப்பட்டுள்ளதாக பொய்யாக சான்றளித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றங்களுக்காக குறைந்தபட்சம் 22 மாதச் சிறைத்தண்டனையும் $10,000 அபராதமும் விதிக்குமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.