வெள்ள நீர் உள்ளே செல்லாமல் இருக்க வெள்ளத் தடுப்புச் சாதனங்களை வீடுகளுக்கும் வர்த்தகங்களுக்கும் முதல்முறையாக இரவல் கொடுக்க இருக்கிறது பொதுப் பயனீட்டுக் கழகம்.
ஓர் இடத்திலிருந்து இன்னொர் இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடிய இருவகை வெள்ளத் தடுப்புச் சாதனங்களைப் பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று அறிகம் செய்தது.
வடகிழக்கு பருவகாலம் காரணமாக இம்மாதத்தின் பிற்பாதியிலிருந்து அடுத்த மார்ச் மாதம் வரை சிங்கப்பூரில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
வெள்ளம் எளிதில் ஏற்படக்கூடிய, சிங்கப்பூரின் கிழக்கு, மத்தியப் பகுதிகளில் இருக்கும் கீழ்மட்டப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ள இடங்களில் அமைந்துள்ள 20 வீடுகளுக்கும் கடைவீடுகளுக்கும் புதிய வெள்ளத் தடுப்புச் சாதனங்கள் இரவல் கொடுக்கப்படும்.
வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கவும் அப்படியே வெள்ளம் ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கவும் இந்தச் சாதனங்கள் பயன்படுத்தப்படும்.
டிஎஃப்பி என்றழைக்கப்படும் வெள்ளத் தடுப்புச் சாதனம் 0.6 மீட்டர் உயரமும் 20 கிலோ எடையும் கொண்டது. காற்றடிக்கப்பட்ட இந்தச் சாதனம் வெள்ள நீரிடமிருந்து தற்காலிகமாகப் பாதுகாப்பு வழங்கும்.
ஒவ்வொரு டிஎஃப்பி வெள்ளத் தடுப்புச் சாதனத்தின் விலை $1,200. 16 வீடுகளுக்கும் நான்கு கடை வீடுகளுக்கும் டிஎஃப்பி சாதனங்கள் ஓராண்டுக்கு இரவல் கொடுக்கப்படும்.
இந்தச் சாதனத்தைத் தயாரிக்கும் பிரிட்டிஷ் நிறுவனத்திடமிருந்து மேலும் 50 செட் தடுப்புகளை வாங்க கழகம் திட்டமிட்டுள்ளது.
டிஎஃப்பி தடுப்புச் சாதனத்தை வாசலில் வைத்து அதற்குள் காற்றை செலுத்த வேண்டும்.
ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடிய வெள்ளத் தடுப்பு சாதனங்களையும் கழகம் பயன்படுத்த இருக்கிறது.
சாலைகளிலும் நடைபாதைகளிலும் வெள்ள நீர் தேங்காமல் இருக்க அவற்றை வேறோர் இடத்துக்கு திசை திருப்பிவிட அதிகாரிகள் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவர். இந்தச் சாதனத்தைத் தயாரிக்கும் சுவீடன் நாட்டு நிறுவனத்திடமிருந்து கழகம் 15 செட்டுகளை வாங்கியுள்ளது.
$3,800 பெறுமானமுள்ள ஒவ்வொரு செட்டிலும் 10 தடுப்புகள் இருக்கும்.
மேலும் 35 செட்டுகளை வாங்க கழகம் திட்டமிட்டிருப்பதாகக் கழகத்தின் மூத்த பிரதான பொறியாளர் திரு தாமஸ் சோ கூறினார்.
இந்தத் தடுப்புகளைக் கட்டுமானத் தளங்களிலும் பயன்படுத்த கழகம் பரிசீலித்து வருகிறது.
சாலைகளிலும் நடைபாதைகளிலும் தேங்கிக் கிடக்கும் வெள்ள நீரை வேறோர் இடத்துக்குத் திசை திருப்பிவிட பயன்படுத்தப்படும் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடிய வெள்ளத் தடுப்புச் சாதனம். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்