சிங்கப்பூர் அதன் ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்பு செலவினத்தில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலரை, (S$3.1 பி.) அதாவது 18 விழுக்காட்டை மனவுளைச்சல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆண்டுதோறும் செலவிடுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கைக்கு ஒன்பது வட்டாரங்கள் உட்படுத்தப்பட்டன. சிங்கப்பூரின் ஒட்டுமொத்த செலவினத்தில், மனவுளைச்சல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒதுக்கப்படும் விகிதாசாரம், அந்த ஒன்பது வட்டாரங்களில் ஒதுக்கப்படும் விகிதாசாரத்திலேயே இரண்டாவது ஆக அதிகம்.
மனவுளைச்சல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆஸ்திரேலியாவில் ஒதுக்கப்படும் 18.8 விழுக்காட்டைவிட இது 0.8 விழுக்காடு குறைவு. ஹாங்காங், தென்கொரியா, தைவான், தாய்லாந்து, ஐக்கிய அரபு சிற்றரசுகள், பிரிட்டன், அமெரிக்கா ஆகியன மற்ற ஏழு வட்டாரங்கள்.
சுகாதாரப் பராமரிப்பு ஆலோசனை நிறுவனமான ‘ஏஷியா கேர் குரூ’ தயாரித்துள்ள இந்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
உலகம் முழுவதும் கடந்தகால ஆய்வுகளில் பங்கெடுத்தவர்களில் 84 விழுக்காட்டினர், தாங்கள் மனவுளைச்சலுக்கு ஆளானதாகக் கூறியிருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சூழலில் தாங்கள் பணிபுரிவதாக 64 விழுக்காட்டினர் கூறியிருந்தனர்.
வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டும் வேலையுடன் தொடர்பில் இருப்பதற்கான தேவையே உலகளவில் மனவுளைச்சல் அதிகரிக்க காரணமாக இருப்பதாக சுகாதார காப்புறுதிச் சேவை நிறுவனமான ‘சிக்னா’வின் வட்டார தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியன் மெங்குவல் கூறினார்.
குறிப்பாக, இத்தகைய பிரச்சினை ஆசியாவில் அதிகம் காணப்படுகிறது. ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 91 விழுக்காட்டினர், தங்களுக்கு மனவுளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மனவுளைச்சல் ஒரு சுகாதாரப் பிரச்சினை என்று அறியும் விழிப்புணர்வை அதிகரிக்க கூடுதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
“மனவுளைச்சல் என்பது ஒரு பெரிய பிரச்சினை. மனவுளைச்சல் பற்றி மக்கள் அதிகம் பேச விரும்புவதில்லை. ஆனால், இது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும்,” என்று திரு மெங்குவல் கூறினார்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட மருத்துவப் பிரச்சினைகள் மனவுளைச்சலுடன் தொடர்புடையதாக அவர் கூறினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity