ஷா பிளாசாவில் ஒழுங்குபடுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்த 30 வயது திரு ரவிச்சந்திரன் ராமகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டியது ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ எனும் தொண்டூழிய அமைப்பு.
அந்த அமைப்பின் நிறுவனரான குமாரி தீபா சுவாமிநாதன் சிங்கப்பூரில் கட்டுமான ஊழியராகப் பணிபுரிந்த திரு ரவிச்சந்திரனின் உறவினர் திரு முருகேசன் லட்சுமணனை, 34, தமது வீட்டில் சந்தித்துப் பேசினார்.
திரு முருகேசனுக்கு இரவு உணவு வழங்கியதுடன் தமது ஃபேஸ்புக் மூலமும் நண்பர்கள் மூலமும் திரட்டப்பட்ட பணத்தை நன்கொடையாகக் கொடுத்தார்.
இந்தத் தொகை, தொண்டூழிய அமைப்பைச் சேர்ந்த 300 தொண்டூழியர்களின் முயற்சியால் திரட்டப்பட்ட நிதி என்றும் சிங்கப்பூரில் பணியாற்றும் திரு ரவிச்சந்திரனின் நண்பர்களும் சக ஊழியர்களும் வழங்கிய நன்கொடைகளைச் சேர்த்து திரு ரவிச்சந்திரனின் குடும்பத்தாருக்கு திரு முருகேசன் அனுப்புவார் என்றும் கூறினார் குமாரி தீபா.
‘எக்ஸ்பிரஸ் 21’ நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த திரு ரவிச்சந்திரன், அண்மையில் பாலஸ்டியர் சாலையில் உள்ள கட்டடத்தின் முதல் தளத்தைப் பிரிக்கும் பலகை வழியாகக் கீழ்த்தளம் ஒன்றின் மீது விழுந்து மாண்டார்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் (வாணியம்பாடி) சேர்ந்த ரவிச்சந்திரன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பல கட்டுமானத் துறை நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2018ல் சொந்த ஊருக்குச் சென்ற அவர், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் அங்கேயே தங்கி வீடு கட்டுவதுடன் கல்யாண காரியங்களில் மும்முரமாக இருந்தார்.
கடன்களை அடைக்க மூன்று மாதங்களுக்கு முன்னர் மீண்டும் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.
அவரது அண்ணன் திரு பார்த்திபனும் சிங்கப்பூரில் பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
திருமணமாகி ஓராண்டு நிறைவை எட்டுவதற்குள் திரு ரவிச்சந்திரன் அகால மரணமடைந்தார்.
அவரது நல்லுடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யபட்டது.
இதற்கிடையில் இந்தச் சம்பவம் குறித்து வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்று செய்தது.
பணிக்காலக் காய இழப்பீட்டுச் சட்டம் அடிப்படையிலான கோரிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பதிவிற்குப் பின் இழப்பீடு தொகை வழங்க மூன்று முதல் ஆறு மாதங்களாகும் என்றும் அந்தப் பதிவில் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் குறிப்பிட்டது.
“வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தின் அனுபவங்கள் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த இதுபோன்ற சம்பவங்களுக்கு இழப்பீட்டுத் தொகை $100,000க்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது,” என்றார் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தின் பேச்சாளர்.