நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்ட விதிக்கப்பட்டிருக்கும் தடையால் மில்லியன் கணக்கான வெள்ளி மதிப்பிலான 11,000 மின்ஸ்கூட்டர்களின் விற்பனை தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
அவர்களில் பலர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை விளக்க கடந்த புதன்கிழமை நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளைச் சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து மின்ஸ்கூட்டர் தொடர்பிலான வர்த்தகர்கள் நேற்று முன்தினம் கிளார்க் கீ பகுதியில் ஒன்றுகூடிப் பேசினர்.
அடுத்து என்ன செய்வது என்பது குறித்த அவர்களின் ஆலோசனை சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.
பாதிக்கப்பட்ட 30 வர்த்தகர்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் ஒன்றை அமைக்கலாமா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தற்போது $6.53 மில்லியன் மதிப்பிலான 11,000க்கும் மேற்பட்ட மின்ஸ்கூட்டர்கள் விற்பனையாளர்களிடம் இருப்பு உள்ளதாக நேற்று முன்தினம் மாலை ‘சேஃப்டி ஃபர்ஸ்ட்’ என்னும் மின்னஞ்சல் கணக்கு மூலம் கசிந்த தகவல் ஒன்று தெரிவித்தது.
இந்த தகவல் அடங்கியஆவணம் சில்லறை விற்பனையாளர்களால் தயாரிக்கப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டாலும் இந்த எண்ணிக்கை மதிப்பீடு மட்டுமே என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் ஒருவர் தெரிவித்தார்.
இம்மாதம் 5ஆம் தேதி விதிக்கப்பட்ட தடைக்குப் பின்னர் மின்ஸ்கூட்டர் விற்பனை குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்ததாக சில்லறை விற்பனையாளர்கள் கூறினர்.
கடந்த வாரத் தொடக்கத்தில் சில்லறை வர்த்தகர்கள் சிலர் தங்களை வந்து சந்தித்ததாக நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறினர்.
நடந்து செல்வோரின் பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்ட தடையின் அவசியத்தை அப்போது அந்த வர்த்தகர்களிடம் எடுத்துரைத்ததாக அவர் தெரிவித்தனர்.