கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகச் சாலைப் போக்குவரத்துக்கு எதிராகத் தனது வாகனத்தை ஓட்டி மற்றொருவரின் மரணத்தை விளைவித்த கார் ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் மாண்டதுடன் மேலும் நால்வர் காயமடைந்தனர்.
வர்த்தகரான 56 வயது லிம் சை ஹேங்கிற்குச் சிறைத்தண்டனையுடன் 12 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முன்யோசனையின்றி நடந்துகொண்டு மற்றொருவரின் மரணத்தை விளைவித்ததை லிம் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். அவரது குற்றத்திற்காக அதிகபட்சமாக ஐந்தாண்டு சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்தத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அரசுதரப்பினர் முடிவு எடுக்கும் வரையில், தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு அரசுதரப்பு கேட்டுக்கொண்டது.
கடுமையான காயத்தை விளைவித்ததன் பேரில் மூன்று குற்றச்சாட்டுகளும் மேலும் நான்கு குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி காலை நேரத்தில் லிம் தனது மகனுடன் ஹவ்காங்கிலுள்ள தங்களது வீட்டிலிருந்து டெப்போ ரோட்டிலுள்ள தனது வேலை இடத்திற்கு ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது, தனது வேலை இடத்திற்கு அருகிலுள்ள ஜாலான் புக்கிட் மேரா சாலை வழியாக வெளியேறுவதற்குப் பதிலாக துவாஸை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலை வழியாகத் தொடர்ந்து சென்றார். தனது மகனின் ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தாத லிம், இறுதியில் துவாஸ் சோதனைச் சாவடியை அடைந்து மோட்டார் சைக்கிள் தடத்திற்குள் தனது காரை ஓட்டினார். மோட்டார் சைக்கிள் தடம் மிகவும் குறுகலாக இருந்ததால் லிம் மூன்று முனைகளில் காரைத் திருப்பி ( three-point turn ) சாலையின் எதிர்த்திசையில் செல்லத் தொடங்கினார். அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது லிம் ஸ்கூட்டர் ஒன்றை மோதியதுடன் சில வாகனங்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்தார்.
இதனால், ஒரு காரின் ஓட்டுநர் பல்வேறு காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் நடந்தபோது லிம்மின் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.