ஃபேஸ்புக்கில் ஆள்மாறாட்ட மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இதில் ஏமாற்றப்பட்டு குறைந்தது $1.2 மில்லியன் மதிப்பிலான பணத்தை இழந்தோரில் பெரும்பாலானோர் முதியவர்கள்.
இவ்வாண்டு ஜனவரிக்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையே குறைந்தது 45 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலிசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 24ஆக இருந்தது.
கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பாதிக்கப்பட்டோர் மொத்தம் $740,000 இழந்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினராகவோ அல்லது நண்பராகவோ ஆள்மாறாட்டம் செய்து அவர்களிடமிருந்து தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொள்வர்.
அறுபது வயதுக்கும் அதிகமானோர் ஆள்மாறாட்ட சம்பவங்களில் ஏமாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக போலிசார் தெரிவித்தனர்.
ஃபேஸ்புக் கணக்குகள் ஊடுருவப்படலாம் அல்லது போலிக் கணக்குகள் உருவாக்கப்படலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு அந்த வயதுப் பிரிவினருக்கு குறைவாக இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று போலிசார் கூறுகின்றனர்.
“மற்றவர்களைவிட இந்த வயதைச் சேர்ந்தவர்கள் பிறரை அதிகம் நம்பக்கூடியவர்கள்,” என்று போலிசார் நேற்று தெரிவித்தனர்.
மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, சமூக ஊடகங்கள் மூலம் கேட்கப்படும் வழக்கத்திற்கு மாறான கோரிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
குறிப்பாக, பணம் அல்லது தனிப்பட்ட விவரங்கள் குறித்து ஏதேனும் கேட்கப்பட்டால் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
குடும்பத்தார் அல்லது நண்பர்களின் பெயரில் இத்தகைய கோரிக்கைகள் அனுப்பப்பட்டால் உண்மையிலேயே அதனை அனுப்பியது அவர்கள்தானா என்பதைத் தனிநபர்கள் சரிபார்க்கவேண்டும் என்று போலிஸ் வலியுறுத்தியது.
இத்தகைய மோசடிகளைப் பற்றி தகவல் அறிந்தால் பொதுமக்கள் போலிசாரை 1800-255-0000 என்ற எண்ணை அழைக்கலாம். அல்லது அவர்கள் www.police.gov.sg/iwitness என்ற இணையத்தளத்திற்கு செல்லலாம்.
மோசடி தொடர்பான ஆலோசனைக்கு www.scamalert.sg தளத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.