கழிவுப் பொருட்களிலிருந்து எடுக்கப்படும் ‘நியூசேண்ட்’ எனப்படும் மண்ணை இங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் சாத்தியம் உருவாகியுள்ளது.
இது நடைமுறையில் எந்த அளவு சாத்தியமானது அல்லது செயல்படக்கூடியது என்பதைப் பரிசோதிக்கும் வகையில் சுற்றுப்புற, நீர்வள அமைச்சு ‘நியூசேண்’டை நேரடியாக பயன்படுத்திப் பார்க்கும்.
‘நியூவாட்டர்’ எனப்படும் புது
நீரைப் போலவே மண் உற்பத்தியில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள ‘நியூசேண்’டை தயாரிக்கும் யோசனை உருவானது.
அதே நேரத்தில், கழிவுப் பொருளிலிருந்து நமக்கு தேவைப்படும் முக்கியமான வளம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் ‘நியூசேண்ட்’ யோசனை உருவானதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
“செமாக்காவ் குப்பை நிரப்பும் நிலம் செயல்படக்கூடிய காலத்தை நீட்டிக்க நியூசேண்ட் உதவும்,” என்று நேற்று கூறிய அவர், சிங்கப்பூர் சுற்றுச்சூழல் தரத்திற்கேற்ப ஆய்வுக்கூடங்களில் நியூசேண்டின் பயன்பாடு குறித்து ஆராயப்பட்டதாக சொன்னார்.
‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் 105 மீட்டர் நீளமுடைய தற்காலிக நடைபாதையைக் கட்டுவதற்கு ஏற்கெனவே நியூசேண்ட் பயன்படுத்தப்பட்டது. மேலும், பான் பசிபிக் ஹோட்டலுக்கு அருகே முப்பரிமாண கான்கிரீட் இருக்கையைக் கட்டுவதற்கு இது பயன்படுத்தப்பட்டது.
நியூட்டன் பகுதியில் உள்ள ‘என்வைரன்மண்ட்’ கட்டடத்திற்கு எதிரே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 24 மீட்டர் நீளமுடைய நடைபாதை ஒன்று நியூசேண்டைக் கொண்டு கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் தானா மேரா கோஸ்ட் ரோட்டில் நியூசேண்டை கொண்டு சோதனை முயற்சி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.