நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து தமது சொந்த குடும்ப உறுப்பினர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்திய வேலையில்லாத ஆடவர் ஒருவருக்கு ஒன்பது மாத, நான்கு வாரச் சிறைத் தண்டனையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
விவாகரத்து நடந்துகொண்டிருந்தபோது தமது மனைவியை அந்த 48 வயது சிங்கப்பூரர் மானபங்கம் செய்ததாகவும் தமது மூன்று பதின்ம வயது பிள்ளைகளுக்கு அவர் தொந்தரவு தந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆடவரின் மகனும் இரு மகள்களும் 14க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
தொந்தரவு விளைவித்ததாக நான்கு குற்றச்சாட்டுகள், மானபங்கம் செய்ததாக இரு குற்றச்சாட்டுகள், மாதர் சாசனத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் தொடர்பில் அவர்
குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு தண்டனை விதிப்பதில் வேறு 28 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. 2017ஆம் ஆண்டு அக்டோபருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் இந்தக் குற்றங்களைப் புரிந்தார்.