சிங்கப்பூரின் தொழிற்சாலைகளில் உள்ள குளிர்பதனப்படுத்தப்பட்ட தண்ணீர் முறையில் அடுத்த ஆண்டிலிருந்து குறைந்தபட்ச எரிசக்தி சிக்கன தரநிலையை தேசிய சுற்றுப்புற வாரியம் நிர்ணயிக்கும்.
இந்த நடவடிக்கை மூலம் ஆண்டிற்கு 100,000 டன் கரிம வெளியீட்டை குறைக்க முடியும்.
தற்போது, இத்தகைய தண்ணீர் முறையில் 70 விழுக்காடு அளவு உன்னத நிலையை எட்டவில்லை என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று கூறினார்.
சிங்கப்பூரின் தொழிற்சாலைகளில் எரிசக்தி சிக்கனம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்ற அவர், முன்னணி நாடுகளில் உள்ள நிலைக்கு ஏற்ப அது அமைய வேண்டும் என்றார்.
இந்தப் புதிய தரநிலை மூலம் நிறுவனங்கள் அவற்றின் எரிசக்தி பயன்பாட்டை 245 கிகாவாட் மணி நேரமாக குறைக்க முடியும்.
இந்த அளவு கரிம வெளியீடு குறைக்கப்படுவது, சாலையிலிருந்து 21,000 கார்களை நீக்குவதற்கு சமமாகும். 2025ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு ஏறத்தாழ $37 மில்லியன் செலவை நிறுவனங்கள் குறைக்க முடியும் என்று திரு மசகோஸ் கூறினார்.