இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை மின்னஞ்சல் மூலம் செய்யப்பட்ட மோசடியின் விளைவாக வரத்தகங்கள் $32 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்திருப்பதாக போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசடிக்காரர்கள் விரித்த வலையில் சிக்கிய வர்த்தகர்கள் தங்கள் பங்காளிகளுக்குப் பணத்தை அனுப்புவதாக நம்பி பணத்தை இழந்தனர்.
சிலர் தங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதாக நம்பி ஏமாந்தனர். அவர்கள் அனுப்பிய பணம் மோசடிக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த வங்கிக் கணக்குகளுக்குச் சென்ற பிறகுதான் தாங்கள் ஏமாந்துவிட்டதை வர்த்தகர்கள் உணர்ந்தனர்.
ஊடுருவப்பட்ட அல்லது பொய் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பணம் பறித்தனர். இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்கள் இந்த மோசடி தொடர்பாக இதுவரை 276 புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
இதுவரை தலைமை நிர்வாக அதிகாரிகளாக, வர்த்தகப் பங்காளிகளாக, விநியோகஸ்தர்களாக பாசாங்கு செய்து வந்த மோசடிக்காரர்கள் தற்போது நிறுவனங்களின் ஊழியர்களாகவும் தங்களைக் காட்டிக்கொண்டு வர்த்தகர்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளனர்.
பொய் மின்னஞ்சல் முகவரிகளை அடையாளம் காண்பது குறித்து போலிசார் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
“பொய் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கும் மோசடிக்காரர்கள் பொதுவாக உண்மையான மின்னஞ்சல் முகவரியில் உள்ள சில எழுத்துகளை மாற்றி புதிய முகவரியை உருவாக்குவர்.
“இந்தப் பொய் முகவரிகள் சட்டென்று பார்ப்பதற்கு உண்மையான மின்னஞ்சல் முகவரியைப் போலவே இருக்கும்.
“கூர்ந்து கவனித்தால்தான் உண்மையான மின்னஞ்சல் முகவரிக்கும் அதற்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.
மின்னஞ்சல் பெறுபவர்களுக்குச் சந்தேகம் வராமல் இருக்க வர்த்தகங்களின் சின்னங்களையும் அவர்கள் பயன்படுத்தக்கூடும்.
“அதுமட்டுமல்லாது, உண்மையான நிறுவனத்தின் இணையப்பக்கத்துக்கான இணைப்பையும் மோசடிக்காரர்கள் பொய் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கக்
கூடும்,” என்று போலிசார் எச்சரித்தனர்.
ஊழியர்களின் பெயர்களைக் கொண்ட வங்கி கணக்கு அறிக்கைகளையும் மோசடிக்காரர்கள் அனுப்பிவைக்கக்கூடும் என்று போலிசார் கூறினர்.
கட்டணம் கட்டும் முறையில் திடீரென்று மாற்றங்கள் ஏற்பட்டால் வர்த்தகர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வர்த்தகர்களுக்கு போலிசார் அறிவுரை கூறியுள்ளனர்.
இத்தகைய மோசடிகள் குறித்து ஊழியர்களுக்கும் வர்த்தகர்கள் எடுத்துக்கூற வேண்டும் என்று போலிசார் தெரிவித்தனர்.