நீரிழிவுடன் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சார்கோபினா எனப்படும் தசை இழப்பு ஏற்படும் சாத்தியம் இரண்டரை மடங்கு அதிகம் என்று டியூக்-என்யுஎஸ் உடன் சேர்ந்து சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பிரிவு 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கும் முதியவர்களில் 58 விழுக்காட்டினருக்கு பிரீ சார்கோபினியா, சார்கோபினியா ஆகியவை ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சார்கோபினியா என்பது வயது காரணமாக ஏற்படக்கூடிய உடல்நலப் பிரிச்சினை.
இந்நோய் காரணமாக உடற்குறை, பலவீனம், கீழே விழும் அபாயம் ஆகியவை ஏற்படக்கூடும். பிரி சார்கோபினியா என்பது குறைந்த தசை எடையாகும். இது தசையின் வலிமையைப் பாதிக்காது.
தொடர்ந்து பலமுறை கீழே விழுவது அல்லது விழ இருந்தது அல்லது காரணமேதும் இல்லாது குறையும் எடை ஆகியவை சார்கோபினியாவுக்கான அறிகுறிகள் என்று இங் டெங் ஃபோங் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் புங் ஃபூ யின் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள முதியவர்களில் 10 விழுக்காட்டினர் ஏதேனும் ஒருவகை உடற்குறையுடன் தங்கள் வாழ்வின் கடைசி பத்து ஆண்டுகளைக் கழிப்பதாக சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் ஆய்வுப் பிரிவின் இயக்குநர் இணைப் பேராசிரியர் டான் ஙியாப் சுவான் தெரிவித்தார்.
இதற்கு சார்கோபினியாவுடன் தசை மற்றும் எலும்பு குறைபாடுகளும் காரணம் என்றார் அவர். “சிங்கப்பூரின் மக்கட்தொகை விரைவாக மூப்படைந்து வருகிறது. இதனால் சார்கோபினியாவினால் ஏற்படும் பிரச்சினை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சார்கோபினியா ஏற்படுத்தக்கூடிய தாக்கம், அதுதொடர்பான மற்ற விஷயங்கள் பற்றிய புரிதல் இருந்தால் இந்நோயால் ஏற்படும் தசை இழப்பு மோசமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்,” என்று ஆய்வுக்குத் தலைமைதாங்கிய இணைப்பேராசிரியர் டான் கூறினார்.
பாசிர் ரிஸ் பலதுறை மருந்தகத்தில் சிகிச்சை பெறும் 792 நோயாளிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அவர்கள் 60 வயதிலிருந்து 89 வயதுக்குட்பட்டவர்கள். ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 380க்கும் மேற்பட்டோருக்குப் பிரிவு 2 நீரிழிவு உள்ளது.
ஆய்வில் பங்கெடுத்தோரிடம் கையைப் பயன்படுத்தி அழுத்திப் பிடித்தல், நடையின் வேகம், தசையின் எடை ஆகிய சோதனைகள் நடத்தப்பட்டன. பிரிவு 2 நீரிழிவு கொண்டோரில் 28 விழுக்காட்டினருக்கு சார்கோபினியா இருந்ததும் 30 விழுக்காட்டினருக்கு பிரி சார்கோபினியா இருந்ததும் தெரியவந்தது.