துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்ட ஐந்து வயது சிறுவனின் பெற்றோர், வழக்குக்கு எதிராக சாட்சிக் கூண்டிலேறி தற்காப்பு வாதத்தை முன்வைக்க வேண்டாமென அவனது பெற்றோர் முடிவெடுத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் குறிப்பிட்ட சிறுவனின் தந்தையின் வழக்கறிஞர், இதனை “ஒட்டுமொத்த உத்திபூர்வ முடிவு,” என்றார்.
ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அவரது மனைவி அஸ்லின் அர்ஜுனா ஆகிய இருவரும் தங்களது மகன் மீது சுடுநீரை ஊற்றியதுடன் பல்வேறு விதமாகத் துன்புறுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்மாதம் 12ஆம் தேதி தொடங்கிய நீதிமன்ற விசாரணையில், கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி சிறுவன் இறந்தான் என்றும் அதற்கு முந்தையை ஒரு வாரத்துக்குள் சிறுவன் மீது குறைந்தபட்சம் நான்கு முறையாவது அவனது பெற்றோர் சுடுநீரை ஊற்றியதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கில் தற்காப்பு வாதத்தை முன்வைக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி வேலரி தியன் சிறுவனின் பெற்றோரை நேற்று அழைத்தார்.
அவ்வாறு தற்காப்பு வாதத்தை முன்வைத்தால் அவர்களிடம் குறுக்குக் கேள்விகள் கேட்கப்படலாம் என்றும் அவற்றுக்குப் பதிலளிக்காமல் மௌனம் சாதித்தால், அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்று முடிவெடுப்பதில் அவர்களுக்கு எதிரான முடிவுகூட எட்டப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
அதனையடுத்து, தாம் சாட்சியமளிக்க விரும்பவில்லை என்று சிறுவனின் தாயான அஸ்லின் குறிப்பிட்டார்.
தான் மௌனமாக இருக்க விரும்புவதாக மலாய் மொழிபெயர்ப்பாளரின் வழியாக ரிட்ஸுவான் தெரிவித்தார்.
இந்தத் தம்பதி ஏற்கெனவே பல வாக்குமூலங்களை போலிசாருக்கு அளித்துள்ளனர். அவற்றில் சிறுவனைத் துன்புறுத்தியதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இவ்விருவரும் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க விரும்பவில்லை என்றால், அவர்களது உளவியல் நிபுணர்கள் மட்டுமே தற்காப்பு வாதங்களைச் சமர்ப்பிப்பார்கள். இதனால் பிரதிவாதிகளுக்கு நேரும் நிலை பற்றியும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity