சட்டவிரோதமாக புகைபிடித்த ஓர் ஆடவருக்கு அழைப்பாணை விதித்த அதிகாரியே அதன் பின்னர் சட்டத்தை மீறும் வகையில் சற்று நேரத்துக்குள்ளாக மின்சிகரெட் பிடித்ததை அடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சுற்றுப்புற வாரியத்தைச் சேர்ந்த அந்த அதிகாரி, மின்சிகரெட் பிடிப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அதிகாரி மின்சிகரெட்டைத்தான் பயன்படுத்தி இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.
சுகாதார அறிவியல் ஆணையமும் அதிகாரிக்கு எதிராக புகையிலை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்மாதம் 16ஆம் தேதியன்று பீச் ரோட்டில் உள்ள கோல்டன் மைல் கட்டடத்தில் சட்டவிரோதமாக புகைபிடித்த வயதான ஆடவர் ஒருவரைப் பிடித்த அந்த அதிகாரி, அவருக்கு அழைப்பாணை விதித்தார்.
ஆனால் அந்த ஆடவர் ஒத்துழைக்க மறுத்ததால் காவலர்களின் உதவி நாடப்பட்டது.
அழைப்பாணையை விதித்த பின், அங்கிருந்து காவலர்களும் அகன்றுவிட்டனர்.
கட்டடத்திற்கு வெளியே சென்ற அதிகாரி, இன்னொரு ஆடவருடன் அமர்ந்து மின்சிகரெட் பிடிக்கத் தொடங்கினார்.
அந்தக் காட்சியைப் பதிவு செய்த திரு சாம் லெக், 46, தடை செய்யப்பட்ட மின்சிகரெட்டை ஓர் அதிகாரி எப்படி பயன்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பி ஃபேஸ்புக்கில் அதே நாளன்று பகிர்ந்துகொண்டார்.
அவரின் பதிவு நேற்று முன்தினம் வரை 3,900 முறை பகிர்ந்துகொள்ளப்பட்டதுடன் 150க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
முரண்பட்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையைக் குறித்துப் பதிலளிக்குமாறு இணையவாசிகள் பலர், தேசிய சுற்றுப்புற அமைப்பிடம் முறையிட்டுள்ளனர்.
சென்ற ஆண்டு பிப்ரவரி முதல் மின்சிகரெட்டுகளை வைத்திருப்பது, வாங்குவது, பயன்படுத்துவது ஆகியவை சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளன.
சட்டத்தை மீறுவோருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity