சிங்கப்பூரில் 25,000 சைக்கிள்களை இயக்குவதற்கான ‘மொபைக்’ நிறுவனத்தின் உரிமம் கைமாறியுள்ளது. மற்றொரு சைக்கிள் பகிர்வு நிறுவனமான ‘எஸ்ஜி பைக்’ அந்த உரிமத்தைப் பெற்றுள்ளது.
இதன்மூலம் சிங்கப்பூரின் ஆகப்பெரிய சைக்கிள் பகிர்வு சேவை வழங்கும் நிறுவனமாக ‘எஸ்ஜி பைக்’ உருவெடுத்துள்ளது.
ஆரம்பத்தில் இரு நிறுவனங்களும் ஒப்புக்கொண்ட மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகைக்கு ஒப்பந்தம் முடிவடைந்தது.
தற்போதுள்ள ‘மொபைக்’ சைக்கிள்களை பயன்படுத்த இனி ‘எஸ்ஜி பைக்’கின் கைபேசி செயலி கைகொடுக்கும். அதேநேரம் சைக்கிள்களை இயக்க ‘மொபைக்’ செயலியை இனி பயன்படுத்த முடியாது.
நேற்று தொடங்கிய சோதனைக் காலகட்டத்தில் ‘மொபைக்’ சைக்கிள்களில் 30 நிமிடங்களுக்குக் குறைந்த பயணத்துக்கு இலவச சவாரிகளை ‘எஸ்ஜி பைக்’ வழங்குகிறது.
“இந்த சோதனைக் காலம் புதிய வளங்களை சிறப்பாக நிர்வகிக்க அனுமதிப்பதுடன் சைக்கிள் பகிர்வு சேவைகளை மேம்படுத்துவதற்கு தேவையான மாற்றங்களைச் செய்ய உதவும்” என்று எஸ்ஜி பைக் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
‘எஸ்ஜி பைக்’ சைக்கிள் பகிர்வு நிறுவனம் தற்போது 3,000 சைக்கிள்களை இயக்குகிறது. முக்கியமாக தெம்பனிஸ், ஈஸ்ட் கோஸ்ட், ஈசூன் பகுதிகளில் இந்நிறுவனம் சேவை வழங்குகிறது.
மொபைக் நிறுவனம் தீவெங்கும் 18,000 சைக்கிள்களை பயன்பாட்டில் விட்டுள்ளது. மேலும் 7,000 சைக்கிள்கள் அதனிடம் இருப்பு உள்ளன.
சைக்கிள் பகிர்வு சேவையை வடகிழக்குப் பகுதிக்கு விரிவாக்குவதற்கு முன்னதாக மொபைக் நிறுவனத்தின் இருப்பிலுள்ள பெரும்பாலான சைக்கிள்களை பொங்கோலில் பயன்படுத்தத் தொடங்கும் என ‘எஸ்ஜி பைக்’ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது.
கையகப்படுத்துதல் இடம்பெற்றாலும் கட்டணங்களில் மாற்ற
மிருக்காது. ஒரு வார பயன்பாட்டுக்குக் கட்டணம் $3.90 என்பதும் 30 நாள் பயன்பாட்டு அட்டையின் கட்டணம் $11.90 என்பதும் தொடரும்.
சிங்கப்பூரில் பகிர்வு சேவைக்காக மொத்தம் 45,000 சைக்கிள்களுக்கு நிலப்போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏனைய சைக்கிள் பகிர்வு சேவை வழங்கும் நிறுவனங்களான எனிவீல், மூவ் டெக்னாலஜி இரண்டும் தலா 10,000 சைக்கிள்களை இயக்க உரிமம் பெற்றுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூரில் சைக்கிள் பகிர்வு நிறுவனங்களின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
உச்ச சேவைக் காலத்தில், மொபைக், ஓஃபோ, ஓபைக் ஆகியவை 100,000க்கும் மேற்பட்ட சைக்கிள்களை இங்கு பகிர்வு சேவையில் ஈடுபடுத்தியிருந்தன.
ஆனால் நிலையான வணிக மாதிரியைக் கொண்டு வர இயலாமை, விதிமுறைகளுடன் ஒத்துப்போவதில் சிரமம் போன்றவற்றால் மூன்று நிறுவனங்களும் சந்தையை விட்டு வெளியேறின.