பிடோக் நார்த் எம்ஆர்டி நிலையத்தின் நுழைவாயிலுக்கு வெளியே, சாலையின் நடுவில் நின்றுகொண்டு எதிர்வரும் வாகனங்களை சுத்தியலால் அடித்த ஆடவரை போலிசார் கைது செய்தனர்.
காலணிகள்கூட இல்லாமல் சாலையின் நடுவே ஆடவர் ஒருவர் கையில் சுத்தியலுடன் நிற்பதையும் அந்த வழியாக வரும் வாகனங்களை மறித்து, சுத்தியலால் அடிப்பதையும் காட்டும் இரண்டு நிமிட காணொளி ‘டிஸ்ட்ரிக்ட் சிங்கப்பூர் ஃபேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.
கார்கள், பேருந்து, லாரி என அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அனைத்தையும் குறிவைத்து அடித்த அந்த ஆடவரின் பின்னாலிருந்து பாய்ந்து சென்ற போலிஸ் ஒருவர் அவரது கையிலிருந்த சுத்தியலைப் பிடுங்கியதுடன் அவரைக் கீழே தள்ளினார்.
மற்றொரு போலிசாரும் பொதுமக்கள் இருவரும் சேர்ந்து அந்த ஆடவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். சாலையோரத்துக்கு அந்த ஆடவர் கொண்டுசெல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து நேற்று மாலை 4 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்ட போலிசார், சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றனர்.
சுத்தியலால் வாகனங்களை அடித்த ஆடவர் மனநலம் குன்றியவர் என்று கூறப்பட்டது.
தனிநபர் பாதுகாப்பு மற்றும் உயிருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் வகையில் கடும் செயலில் இடுபட்டதாக குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்கீழ் அந்த ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த ஆடவர் மனநலக் கழகத்துக்கு அனுப்பப்பட்டு அவரது மனநலம் பரிசோதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity