சிங்கப்பூர்வாசிகளின் வேலைவாய்ப்பு விகிதம் சிறிதளவு ஏற்றம் கண்டிருந்தாலும் வருமான உயர்வு மெதுவடைந்துள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிக்கலான பொருளியல் நிலையிலும் சென்ற ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வேலைவாய்ப்பு விகிதம் சற்று உயர்ந்தது.
இந்நிலையில், வருமான உயர்வு இவ்வாண்டு தொடர்ந்து வளர்ச்சி கண்டாலும், அவ்வளர்ச்சி சென்ற ஆண்டைக் காட்டிலும் மெதுவடைந்து உள்ளதாக அறிக்கை கூறியது.
இந்த அறிக்கையின்படி, 25க்கும் 64க்கும் இடைப்பட்ட வயதினருக்கான வேலைவாய்ப்பு விகிதம் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் 80.3 விழுக்காட்டிலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதத்தில் 80.8 விழுக்காட்டுக்கு உயர்ந்திருந்தது.
இதன்படி பட்டியலில் சமூகத்திற்கும் தனிநபருக்கும் வழங்கக்கூடிய சேவைகள், நிபுணத்துவச் சேவைகள், தகவல் மற்றும் தொடர்புகள், நிதி மற்றும் காப்புறுதி சேவைகள் ஆகிய துறைகளில் அதிகமானோர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
அத்துடன் 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரும் வேலைவாய்ப்பு விகிதமும் சென்ற ஆண்டின் ஜூன் மாதத்தில் பதிவான 26.8 விழுக்காட்டிலிருந்து இவ்வாண்டு 27.6% ஆனது.
மூத்த குடிமக்களை ஊழியர் அணியில் தக்கவைத்திட எடுக்கப்பட்ட முயற்சிகளே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று அமைச்சு சுட்டியது.
இதற்கிடையே நிபுணர்கள், இயக்குநர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் வேலையின்மை விகிதம், சென்ற ஆண்டின் 4 விழுக்காட்டிலிருந்து இவ்வாண்டு 4.7 விழுக்காடானது.
அமெரிக்கா, சீனா வர்த்தகப் போரின் விளைவாக நாட்டின் உற்பத்தி, சில்லறை வர்த்தகத் துறை சற்று ஆட்டம் கண்டுள்ளது. இதனால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று அமைச்சு கூறியது.
சிங்கப்பூரில் உள்ள ஊழியர்களின் இடைநிலை வருமானம் இந்த ஆண்டு 2.2% அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 50% குறைவு.