சேவை வருமானமாகப் பெற்ற கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் தொகையை அறிவிக்காததுடன் சுமார் $320,000 பொருள் சேவை வரிக்கு (ஜிஎஸ்டி) கணக்கு காட்டாத காப்பீட்டு முகவருக்கு $660,000க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சியூ வாய் லிங், 56, மொத்தம் $663,008 அபராதமும் தண்டத் தொகையும் செலுத்த உத்தரவிடப்பட்டது.
வருமான வரித்துறை அதிகாரி மேற்கொண்ட விசாரணைகளில், 2009, 2010ஆம் ஆண்டுகளில் தான் சம்பாதித்த சேவை வருமானம் $1.96 மில்லியனை சியூ தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்தது.
2007ஆம் ஆண்டில் $1 மில்லியனுக்கும் அதிகமான பொருள் சேவை வரிக்குரிய பொருட்கள் அல்லது சேவையை அவர் வழங்கியுள்ளதும் விசாரணைகளில் தெரியவந்ததாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அது குறித்து ஜிஎஸ்டி செலவுக் கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்கவும் ஜனவரி 2008க்குள் ஜிஎஸ்டிக்கு பதிவு செய்யவும் அவர் தவறிவிட்டார்.
இதன் விளைவாக, அவர் $320,412 வரியை தனது கணக்கில் காட்டவில்லை.
நியாயமான காரணமின்றி தவறான வருமானத்தை தாக்கல் செய்ததற்காக சியூவுக்கு $6,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் $621,967 தண்டத் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இது அவர் தெரிவிக்காத சேவை வருமானத்திற்கு செலுத்தப்பட வேண்டிய வருமான வரியின் இருமடங்கு ஆகும்.
ஜிஎஸ்டிக்கு பதிவு செய்யத் தவறியதற்காக $3,000 அபராதமும் $32,041 தண்ட தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. இது செலுத்தப்பட வேண்டிய ஜிஎஸ்டி தொகையின் 10% ஆகும்.
ஒருவரின் வர்த்தகம், வேலை அல்லது தொழிலில் இருந்து பெறப்பட்ட வருமானம் உட்பட சிங்கப்பூரில் ஈட்டப்படும் அனைத்து வருமானங்களுக்கும் வருமான வரி விதிக்கப்படும் என்று வருவாய் ஆணையம் கூறியது.
நியாயமான காரணமின்றி அல்லது கவனக்குறைவினால் தவறான வருமானத்தைக் காட்டும் குற்றத்திற்கு, வசூலிக்கப்பட வேண்டிய வரித் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாக அபராதமும் சில வழக்குகளில் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட் டது.