அறுவை சிகிச்சையின்போது கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் மீதும் மருத்துவர்கள் மீதும் தொடுத்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாதின் குடும்பத்தினர் தோல்வியடைந்துள்ளனர்.
இதனால் இவ்வாண்டு ஜூலை 26ஆம் தேதி வரை மருத்துவமனை சிகிச்சைக்கு செலுத்த வேண்டிய 397,478 வெள்ளி மருத்துவமனைக் கட்டணத்தை அந்த குடும்பத்தினர் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய பல்கலைக் கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 70 வயது திருமதி கோவை மருத்துவமனையிலிருந்து மாற்றி பராமரிப்பில் வைக்கும்படி மருத்துவ மனை தெரிவித்த யோசனையை மாதின் குடும்பத்தினர் பலமுறை நிராகரித்துவிட்டனர். இதனால் மருத்துவமனை கட்டணமும் அதிகரித்துவிட்டது.
2014ஆம் ஆண்டில் மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக திருமதி கோவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் அசைவற்ற நிலைக்கு ஆளானார்.
இதனால் அவரது சார்பில் அவரது மகள்களில் ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முன்பும் அறுவை சிகிச்சையின்போதும் அறுவை சிகிச்சைக்குப் பின்பும் கவனக்குறைவாக நடந்துகொண்டதாக டாக்டர் இயோ டிசெங் டிசாய் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் மீது வழக்குத் தொடுத்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் வழக்கு விசாரணை தொடங்கியபோது அறுவை சிகிச்சையின்போது கவனக்குறைவாக இருந்த குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சைக்கு முன்பு கவனக்குறைவாக இருந்த குற்றச்சாட்டும் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில் 205 பக்க தீர்ப்பை வாசித்த உயர் நீதிமன்ற நீதிபதி டான் சியோங் தியோ, “நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சினை முழுமையாக விவரிக்கப்பட்டதால் கவனக்குறைவு குற்றச்சாட்டை தொடர குடும்பத்தினர் விரும்பவில்லை,” என்றார்.
அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் டாக்டர் இயோவும் தேசிய பல்கலைக் கழகமும் கவனக்குறைவாக நடக்கவில்லை என்றும் அவர் தீர்ப்பில் கூறினார்.
தீர்ப்புக்குப் பிறகு டாக்டர் இயோ வெளியிட்ட அறிக்கையில் திருமதி கோவுக்கு ஏற்பட்ட நிலைக்கு மிகவும் வருந்துவதாகத் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் நானும் எனது குழுவும் அவருக்கு எந்த அளவுக்கு சிகிச்சை வழங்க முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்கியுள்ளோம்,” என்று டாக்டர் இயோ கூறினார்.