சாங்கி விமான நிலையத்திற்கு அருகே விமான நிலைய தளவாடப் பூங்காவில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு (நவம்பர் 28) காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் ஒருவர், போலிசாரால் தீவு முழுவதும் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செயப்பட்டார்.
மலேசியாவில் பதிவான காரை ஓட்டிய 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரை அதிகாரிகள் நிறுத்த சொன்னபோது அவர் காரை வேகமாக ஓட்டிச் சென்றதாக அறியப்படுகிறது. இச்சம்பவம் அன்று இரவு 11 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
வாகனத்தை நிறுத்த சொன்னதற்கு ஒத்துழைக்காமல் அதை வேகமாக ஓட்டிச் சென்ற அந்த ஆடவர், அங்கு பணியில் இருந்த சிஸ்கோ அதிகாரியை மோதப் பார்த்தார்.
சிங்கப்பூரின் தடையற்ற வர்த்தகப் பகுதியில் விமான நிலைய தளவாடப் பூங்கா அமைந்துள்ளது.
அந்த ஆடவர் தப்பிச் சென்ற உடனே தீவு முழுவதும் பல பகுதிகளில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டன. மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட அவர், ஏறத்தாழ ஒரு மணி நேரம் கழித்து உட்லண்ட்ஸில் பிடிபட்டார்.
அவர் பிடிபட்டபோது அவரது இருப்பில் கள்ள சிகரெட்டுகளும் ரொக்கமும் இருந்தன. அவரது வாகனமும் கைப்பற்றப்பட்டது.
தளவாடப் பூங்கா வளாகத்திற்குள் அந்த ஓட்டுநர் சென்றதற்கான காரணம் தெரியவில்லை. கள்ள சிகரெட்டுகளை விநியோகம் செய்வதற்காக அவற்றைச் சேகரிக்க அவர் அங்கு சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் முன்னதாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது நினைவுகூரத்தக்கது.
2014ஆம் ஆண்டில் 64 வயது மலேசியர் ஒருவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியிலிருந்து வெளியேற முற்பட்டார்.