விசாரணை செய்யப்பட்டு வந்த இரண்டு பெண்களுக்கு உதவி செய்வதாகக் கூறி அதற்குக் கைமாறாக அவர்களுடன் பாலுறவு கொண்டதாக சிங்கப்பூர் போலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.
விசாரணை செய்யப்பட்டு வந்த பெண் ஒருவரை அவரது முதலாளி முன்வைத்த குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றுவதாகக் கூறி 31 வயது ஸ்டாப் சார்ஜென்ட் மகேந்திரன் செல்வராஜு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி பாலுறவு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றத்தை அவர் புளோக் 590 அங் மோ கியோ ஸ்திரீட் 51 பலமாடி வாகன நிறுத்துமிடத்தில் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதே போல கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியன்று புளோக் 264 சிராங்கூன் சென்ட்ரல் பலமாடி வாகன நிறுத்திமிடத்தில் இன்னொரு பெண்ணுக்கு உதவி செய்வதாகக் கூறி அவருடன் பாலியல் உறவு கொண்டதாக மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணுக்கு எதிராக வழக்கு பதிவாகாதபடி பார்த்துக்கொள்ளவதாகக் கூறி அவருடன் மகேந்திரன் பாலியல் உறவு கொண்டதாக நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அந்த இரண்டு பெண்களின் வழக்குகள் பற்றி விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவர்களது பெயர்கள் வெளியிடப்படக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகேந்திரன் தற்போது தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஊழல், அனுமதியில்லாமல் கணினியில் பதிவாகி இருந்த தகவல்களைத் திருத்தியமைத்தல், கைபேசியிலும் யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவிலும் ஆபாசப் படங்கள் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
இந்தக் குற்றங்களை மகேந்திரன் கடந்த பிப்வரி மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
அனுமதியினன்றி பெண் ஒருவரின் கைபேசியில் உள்ள படத்தொகுப்புக்குச் சென்று அங்கிருந்த அவரது தனிப்பட்ட படங்களை மகேந்திரன் படமெடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச் செயலை அவர் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதியன்று கிளமெண்டி போலிஸ் பிரிவில் மகேந்திரன் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
மகேந்திரனுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியன்று போலிசில் புகார் செய்யப்பட்டது. மகேந்திரனுக்கு $15,000க்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 27ஆம் தேதியன்று அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரில் ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனையும் $100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity