அடுத்த மாதம் 16ஆம் தேதியிலிருந்து அரசு நீதிமன்றம் அதன் புதிய கட்டடத்தில் தனது பணிகளை முழுமையாக தொடங்கும்.
அடுத்த மாதம் 9ஆம் தேதியிலிருந்து புதிய கட்டடத்துக்கு அரசு நீதிமன்றம் படிப்படியாக இடம்மாறும்.
ஹேவ்லாக் ஸ்குவேரில் உள்ள தற்போதைய எண்முகத் தோற்றம் கொண்ட அரசு நீதிமன்றம் பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் 35 மாடி புதிய கட்டடத்துக்கு இடம்மாறும். புதிய கட்டடத்தில் 53 நீதிமன்றங்கள், நீதிபதிகளுக்கான 54 தனியறைகளும் உள்ளன.
தற்போதுள்ள ஒன்பது மாடி அரசு நீதிமன்றக் கட்டடத்தில் 37 நீதிமன்றங்கள், நீதிபதிகளுக்கான 40 தனியறைகள் மட்டுமே உள்ளன.
பொதுமக்களும் நீதிமன்றத்துக்குச் செல்பவர்களும் பயன்படுத்தக்கூடிய வசதிகளைப் புதிய நீதிமன்றக் கட்டடகம் கொண்டிருக்கிறது.
வர்த்தக நிலையம், மரபுடைமைக் கூடம், நூலகம், வழக்கறிஞர் சங்கம் வழங்கும் இலவச சட்டச் சேவைகள் அடங்கிய உதவி நிலையம், சமூக நீதி மையம், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் கண்காணிப்பு ஆணை தொடர்பான அலுவலகம் ஆகியவை அவற்றில் அடங்கும்.
புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையில் கடந்த ஜனவரி மாதத்தில் விழா ஒன்று நடத்தப்பட்டது.
இணைக்கப்பட்டுள்ள இரு கோபுரங்களைக் கட்டடம் கொண்டிருக்கிறது.
வழக்கறிஞர்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒரே கட்டடத்தில் செயல்பட பொதுவான வேலையிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை சிங்கப்பூர் சட்டப் பயிலரங்கு நிர்வகிக்கும்.