ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூ செய்தித்தளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துகளைத் திருத்தியமைக்க அந்தப் பக்கத்தின் நிர்வாகிக்கு சிங்கப்பூரின் பொய்ச்செய்தி சட்டத்தின்கீழ் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் அந்த உத்தரவுக்குப்பணியப்போவதில்லை என்று அவர் தெரிவித்ததை அடுத்து அந்தப் பதிவையொட்டி திருத்தக் குறிப்பு ஒன்றைப் பதிவிட ஃபேஸ்புக்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இணையத்தளத்துக்கு எதிராக ‘பொஃப்மா’ எனப்படும் இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
திருத்தக் குறிப்பு பதிவிடுமாறு ஃபேஸ்புக்கிடம் தெரிவிக்கும்படி உள்துறை அமைச்சர் கா.சண்முகம் ‘பொஃப்மா’ அலுவலகத்துக்கு உத்தவிட்டார்.
தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவாகியிருந்த பொய்ச் செய்திகளைத் திருத்தியமைக்க ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூ செய்தித்தளத்தின் ஆசிரியர் திரு அலெக்ஸ் டான் சி சியாங் மறுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் செயல் கட்சி உறுப்பினர் ரேச்சல் ஓங் பற்றியும் என்யுஎஸ்எஸ்யு-என்யுஎஸ் ஸடூடன்ட்ஸ் யுனைடெட் பேஸ்புக் பதவி பற்றியும் ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூ பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பொய்ச்செய்தியைத் திருத்தியமைக்க உத்தவிடப்பட்டுள்ளது.
ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூ பக்கம் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது. அது பொய்ச்செய்திகளைப் பரப்பி வருவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பதவியைத் திருத்தியமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குப்
பணிய மறுத்ததற்காக ஸ்டேஸ் டைம்ஸ் ரிவியூவின் ஆசிரியர் திரு டானிடம் ‘பொஃப்மா’ அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது. ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூவின் ஃபேஸ்புக் பக்கத்தையும் அவர்தான் நடத்தி வருகிறார்.
பொய்ச்செய்தி பதிவேற்றம் செய்யப்படும்போது அதையொட்டி திருத்தக் குறிப்பைப் பதிவிட அந்த இணையத்தளத்திற்கு உத்தரவிடப்படுவதாக ‘பொஃப்மா’ அலுவலகம் கூறியது. அப்போதுதான் இணையத்தில் பொய்ச்செய்தியைப் பார்க்கும் பொதுமக்கள் கூடவே திருத்தப்பட்ட பதிவையும் காணலாம் என்று அது தெரிவித்தது.
சிங்கப்பூரின் பொய்ச்செய்தி சட்டத்தின்கீழ் பதிவைத் திருத்தியமைக்க 32 வயது திரு டானுக்கு நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.
ஆனால் தாம் ஆஸ்திரேலிய நாட்டவராகிவிட்டதாகவும் வடகொரியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் அரசாங்கத்தின் உத்தரவுக்கு அடிப்பணியப்போவதில்லை எலன்றும் திரு டான் தமது ஃபேஸ் புக் பக்கத்தில் தெரிவித்தார்.