டாக்சி ஓட்டுநர் ஒருவர் அருகே நின்ற வாகனத்தை காலால் உதைத்து, கைகளால் குத்தும், தம்பதியை கெட்ட வார்த்தைகளால் கண்டபடி திட்டும் காணொளிகள் சமூக வலைத் தளங்களில் பரவலானதை அடுத்து, அந்த ஓட்டுநரை டிரான்ஸ்-கேப் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த இரு காணொளிகளும் வெவ்வேறு சம்பவங்களைக் காட்டுகின்றன.
முதல் சம்பவம் நவம்பர் 22ஆம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது.
அந்தக் காணொளியில் டாக்சி ஓட்டுநர் தனது டாக்சியில் இருந்து இறங்கி, அந்தக் காணொளியைப் படமாக்கிய கார் ஓட்டிக்கு தகாத சைகைகளைக் காட்டுகிறார்.
காரின் ஓட்டுநர் இருக்கையின் கதவைத் திறக்க டாக்சி ஓட்டுநர் முயற்சி செய்கிறார். கதவைத் திறக்க முடியாதபோது, கார் கதவின் கண்ணாடிகளை குத்தி, காரை தொடர்ந்து உதைக்கிறார். காரோட்டியை நோக்கி தகாத சைகைகளைக் காட்டுகிறார்.
நவம்பர் 24ஆம் தேதி நடந்த இரண்டாவது சம்பவத்தில் அதே டாக்சி ஓட்டுநர், டாக்சி நிறுத்துமிடத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நின்ற தம்பதியை நோக்கி தகாத சைகைகளைக் காட்டுகிறார். அவர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபடுகிறார். அவர் கையில் ஏதோ ஒன்றை வைத்திருக்கிறார்.
டாக்சி ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.
இணையத்தில் வலம் வரும் இரு காணொளிகளில் உள்ள அந்த ஆடவர் நவம்பர் 22ஆம் தேதி பேட்டர்சன் சாலையில் வெறித்தனமாக நடந்துகொண்ட சம்பவத்துடனும் நவம்பர் 24ஆம் தேதி ஸ்காட்ஸ் சாலையில் நடந்த வேண்டுமென்றே காயம் விளைவித்தது, மிரட்டி பயமுறுத்தியது தொடர்பான சம்பவத்துடனும் தொடர்புடையவர் என்றும் போலிஸ் தெரிவித்தது.