எரிசக்தி சிக்கன வசதிகளுடன் உருமாறவுள்ள நீ சூன் சவுத் சமூக மன்றம்

நீ சூன் சவுத் சமூக மன்றம், மிகக் குறைந்த அளவில் எரிசக்தியைப் பயன்படுத்தும் கட்டடம் என்பதை அங்கீகரிக்கும் சான்றிதழைப் பெறும் சிங்கப்பூரின் முதல் சமூக மன்றமாகத் திகழவிருக்கிறது. 

நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் அடித்தள ஆலோசகருமான டாக்டர் லீ பீ வா, இது தொடர்பான திட்டங்களை நேற்று அறிவித்தார். நீ சூன் சவுத் சமூக மன்றக் கட்டடத்

திற்குச் செய்யப்படவிருக்கும் மேம்பாடுகள், அதன் எரிசக்தி பயன்பாட்டைப் பாதியளவாக குறைக்கும் என அவர் கூறினார்.

அதே நேரத்தில், அந்தச் சமூக மன்றத்தின் கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தித் தகடுகள், மற்ற பயன்பாடுகளுக்குத் தேவையான எரிசக்தியை உற்பத்தி செய்யும்.

“பருவநிலை மாற்றம் பெரிய விவகாரம். கரிமப் பொருட்களின் வெளியீட்டைக் குறைக்க நம்மால் ஆன எதையும் செய்யவேண்டும்,” என்றார் அவர்.

‘சூப்பர் லோ எனர்ஜி பில்டிங்’ என்பது எரிசக்தியைக் குறைந்தது 40 விழுக்காடு சேமிக்கக்கூடிய கட்டடம் என்று கட்டட, கட்டுமான ஆணையம் வகைப்படுத்தியுள்ளது.

சூரிய சக்தித் தகடுகளைத் தவிர, இயற்கையான காற்றோட்டத்திற்கும் வெளிச்சத்திற்கும் வசதியளிக்கும் வடிவமைப்பை இக்கட்டடம் கொண்டிருக்கும். அத்துடன், எரிசக்தியைச் சேமிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அறிவார்ந்த எரிசக்தி நிர்வாக முறையையும் இந்தக் கட்டடம் கொண்டிருக்கும்.

எரிசக்தியைக் கூடுதல் செயலாற்றலுடன் பயன்படுத்தும் கட்டடமாகத் திகழ்வதுடன் ஞாபக மறதி நோயாளிகள் பயன்படுத்துவதற்கு உகந்த முதல் சமூக மன்றமாகவும் இது திகழும். தெளிவான அறிவிப்புப் பலகைகள், நிற வாரியான வட்டாரங்கள், மூத்தோருக்கான ஓய்விடங்கள் ஆகியவை இதில் அமையப்போகின்றன.

அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கவுள்ள மேம்பாட்டுப் பணிகள், 2022ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2003ஆம் ஆண்டில் நீ சூன் சவுத் சமூக மன்றம் திறக்கப்பட்டதை அடுத்து பெரிய அளவில்  மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவிருப்பது இதுவே முதன்முறை.