பெற்றோர்களிடமிருந்து பெற்ற பாலர் பள்ளிக் கட்டணங்களை முதலாளியின் வங்கிக் கணக்கில் சேர்ப்பதற்குப் பதிலாக தமது சொந்த செலவுகளுக்கு $46,000க்கு மேற்பட்ட பணத்தைப் பயன் படுத்திக்கொண்ட பாலர் பள்ளி யின் முன்னாள் முதல்வருக்கு நேற்று ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜூரோங்கில் உள்ள ஏஸ்கிட்ஸ்@எஸ்ஜி பாலர்பள்ளி மற்றும் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் முதல்வராக இருந்த 30 வயது செரில் ஸனிட்டா கவுர் நெஸ்பால் (படம்), நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்றார். அவர் அந்த பாலர் பள்ளியில் முதல்வராக 2016 ஜூலை மாதம் முதல் 2017 ஆகஸ்ட் மாதம் வரை பணி புரிந்தார்.
ஏஸ்கிட்ஸ்@எஸ்ஜி நிறுவனத்துக்கு ஹவ்காங், ஈசூன், சுவா சூ காங் உட்பட ஏழு வீடமைப்புப் பேட்டைகளில் பாலர்பள்ளி மற்றும் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் உள்ளன. ஜூரோங் நிலையத்தின் முதல்வர் என்ற முறையில் மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை வசூலிப்பதும் அவரது வேலையாக இருந்தது. அந்த வகையில் 2016 அக்டோபர் மாதம் முதல் 2017 ஜூலை மாதம் வரை செரில் ஸனிட்டா 29 பிள்ளைகளின் பெற்றோர்களிடமிருந்து மொத் தம் $46,687.70ஐ பள்ளிக் கட்டணமாகப் பெற்றிருந்தார்.
திருவாட்டி செரில் ஸனிட்டா பெற்றோர் ஒருவருக்கு வழங்கியிருந்த ரசீது பள்ளியின் இயல்பான ரசீதாக இல்லை என்பதை அறிந்த பள்ளி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மேலும் அது குறித்து விசாரித்ததில் செரில் ஸனிட்டாவின் குற்றம் அம்பலமானது.
செரில் ஸனிட்டா இதுவரை தாம் பெற்ற தொகையில் இருந்து $2,000 தொகையை பள்ளி நிர்வாகத்திடம் திரும்ப கொடுத்து விட்டார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். நம்பிக்கை மோசடி செய்த குற்றத்துக்காக செரில் ஸனிட்டாவுக்கு 15 ஆண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கக்கூடும்.