கொசுப் பெருக்கத்தை ஒழிப்பதற்காக அங் மோ கியோவில் புதிய வசதி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு வளர்க்கப்படும் ஆண் கொசுக்கள், பெண் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுத்திடும்.
நாட்டில் பரவிவரும் டெங்கிக்கு எதிராக இப்புதிய வசதி செயல்படும். சென்ற மாதம் 21ஆம் தேதிவரை கிடைத்த தகவல்படி, 14,470 பேருக்கு மேல் டெங்கி தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் 20 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலை நீடிக்காமல் இருக்க, தேசிய சுற்றுப்புற வாரியம் ‘வொல்பாக்கியா’ திட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக திறக்கப்பட்ட புதிய வசதியில், வாரத்திற்கு ஐந்து மில்லியன் வரை ஆண் ‘வொல்பாக்கியா’ ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் காணும்.
திட்டத்தின்படி இவ்வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படும்.
டெங்கி, சிக்குன்குனியா, ஸிக்கா போன்ற நோய்களைப் பரப்பும் பெண் நகர்ப்புற ஏடிஸ் கொசுக்களை நாடிச் செல்லும் ‘வொல்பாக்கியா’ ஆண் கொசுக்கள், அவற்றுடன் இனச்சேர்க்கை செய்ய முயன்றாலும் அதில் உருவாகும் முட்டைகள் குஞ்சு பொரிக்க முடியாது.
இப்படியே தொடர்ந்து விடுவிக்கப்படும் ஆண் ‘வொல்பாக்கியா’ ஏடிஸ் கொசுக்களால் நகர்ப்புற ஏய்டிஸ் கொசுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்ப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
இதன்படி எண்ணிக்கை குறையும்போது டெங்கி தொற்றுக்கான அபாயமும் குறையும்.
புதிய வசதியை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், “பருவநிலை மாற்றத்தையும் மற்ற சவால்களையும் நாம் எதிர்கொள்ள முனைந்தால் டெங்கி கட்டுப்பாட்டைச் சாதாரணமான ஒன்றாகக் கருத முடியாது,” எனக் குறிப்பிட்டார்.
உலக வெப்பமயமாதலின் தாக்கத்தால் அடுத்து வரும் ஆண்டுகளில் டெங்கி நிலை மோசமாகும் வாய்ப்புள்ளது என்றும் அவர் சுட்டினார்.
‘டெக்பிளேஸ் II’ இடத்தில் அமைந்துள்ள புதிய வசதி, $5 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. ‘வொல்பாக்கியா’ திட்டத்திற்குத் தேவையான இடவசதியும் தொழில்நுட்பமும் இங்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன் இத்திட்டத்திற்காக இயங்கி வந்த கட்டடத்தைவிட இப்புதிய வசதி மும்மடங்கு பெரிது. புதுவகை தொழில்நுட்பம்வழி கொசுக்களின் இனப்பெருக்கம் தீவிரப்படுத்தப்படும்.
‘வொல்பாக்கியா’ திட்டத்தால் ஏற்படும் தாக்கம், பொதுமக்கள் சுகாதார எல்லையையும் கடந்து, நாட்டின் ஆராய்ச்சித் துறையை மேம்படுத்தி இருப்பதுடன் பொருளியல் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளதாக டாக்டர் கோ குறிப்பிட்டார்.