கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக பொது நாட்சம்பள ஊழியர்களின் நலனுக்காக குரல் கொடுத்து வந்தவர் மறைந்த மூத்த தொழிற்சங்கவாதி ஜி.முத்து குமாரசாமி. கடந்த வெள்ளிக்கிழமையன்று தமது 68வது வயதில் இவர் காலமானார்.
தந்தையைப் பற்றி நினைவுகூர்ந்தபோது, தொழிற்சங்கத் தலைவராக இருப்பதற்கே முதலிடம் அவர் தந்தார் என்றும் அதற்கு அடுத்த நிலையிலேயே ஒரு தந்தையின் பொறுப்பை அவர் ஏற்றார் என்றும் அவரின் பிள்ளைகள் பகிர்ந்துகொண்டனர்.
இரு மகன்களில் இளையவரான திரு எம்.குணாளன், அது தொடர்பான ஓர் அனுபவத்தைப் பற்றி கூறினார். ஒருநாள் வீட்டுக்கு வந்தபோது தந்தை அழுதுகொண்டிருந்தாராம். காரணம் கேட்டதற்கு, நீண்டகால போராட்டத்திற்குப் பிறகு தம்முடைய தொழிற்சங்க உறுப்பினர்களுக்குச் சேரவேண்டிய பணம் கிடைத்துவிட்டது என்று கூறினாராம்.
“அந்த அளவுக்கு தம் தொழிற்சங்கம் அவருக்கு முக்கியமாக இருந்தது,” என்றார் திரு குணாளன், 38. குடும்பப் பொறுப்புகளை என்றும் திரு முத்துகுமாரசாமி புறக்கணிக்கவில்லை என்று அவரின் மூத்த மகன் எம். சரவணா, 42, வலியுறுத்திக் கூறினார்.
“எங்களுக்கு உற்றத் துணையாக இருந்த அதே நேரத்தில் சொந்த காலில் நிற்கவும் கற்றுத் தந்தார்,” என்றார் திரு சரவணா.
பலரும் செல்லமாக திரு முத்துகுமாரசாமியை ‘பிரதர் குமார்’ என்று அழைப்பர்.
மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்காக நரம்புவழி மருந்து செலுத்தப்படும்போது, இவரின் இருதயம் திடீரென்று நின்றுவிட்டதாக நேற்று முன்தினம் நடந்த தந்தையின் கண்விழிப்புச் சடங்கில் திரு குணாளன் கூறினார்.
தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக இறுதிச்சடங்கு நிதி ஆதரவைப் பெற்றுத் தருவது, திரு முத்துகுமாரசாமி செயல்படுத்தப் பாடுபட்ட மேலும் ஒரு திட்டம். இப்போது அவரின் குடும்பமே அத்திட்டம் வழி பலனடைந்துள்ளது. தந்தையின் இறுதிச் சடங்குக்கான செலவுகளைத் தொழிற்சங்கம் ஈடுகட்ட முன்வந்ததாக திரு குணாளன் தெரிவித்தார்.