அடுத்த ஈராண்டு காலத்தில் தன் 2,000 ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கு சாங்கி விமான நிலையக் குழு (சிஏஜி), $10 மில்லியனை ஒதுக்கவுள்ளது.
நிறுவனத்தின் மின்னிலக்க உருமாற்றத்திற்கு ஏற்ப உருவாகவுள்ள புதிய வேலைகளுக்கும் பொறுப்புகளுக்கும் ஊழியர்களைத் தயார்படுத்த இத்திறன் மேம்பாடு மேற்கொள்ளப்படும்.
தகவமைப்பு, தொழில்நுட்பம், தொழில்நுணுக்கம் தொடர்பில் ஊழியர்களின் திறன் மேம்பாடு அமையும்.
நிறுவனப் பயிற்சிக் குழுவை அமைப்பதற்கு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டபோது இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் மின்னிலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சிகளுக்கு ‘சிஏஜி’ ஊழியர்கள் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும். ஊழியர்கள் அதிகபட்சமாக பத்து நாட்கள் வரை அப்பயிற்சிகளுக்குச் செல்லலாம்.
புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் தயார்நிலையை வலுவாக்க, வளர்ச்சி மனப்பான்மைக்கான பயிற்சித் திட்டமும் உள்ளடங்கும்.
தரவு, எந்திரவியல் செயல்முறை தானியக்கமயம், கணினி நிரலாக்கம் போன்ற மின்னிலக்கத் திறன்கள் தொடர்பில் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஊழியர்கள் பயிற்சி வகுப்புகளுக்கும் பயிலரங்குகளுக்கும் அனுப்பப்படுவர்.
அத்துடன் கூடுதல் ஆதரவு நல்கும் வகையில் மின்னிலக்க வேலையிடத்திற்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சியும் அவரவர்க்கு ஏற்ப திட்டமிட்டு அமைக்கப்படும்.
மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் முறையைத் தொழில்நுட்பம் மாற்றி வர, தொடங்கு நிறுவனங்களுடனும் புத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுடனும் ‘சிஏஜி’ இணைந்து செயல்பட்டு வருகிறது.
வாடிக்கையாளரின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப ஒரு நிஜ விமான நிலையச் சூழலில் புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கிச் செய்து காட்ட இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமை செயலாளரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான திரு இங் சீ மெங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.