மூத்த அரசாங்க ஊழியரான திரு ஜே.ஒய்.பிள்ளைக்கு ‘ஆர்டர் அஃப் தெமாசெக்’ என்று நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேசிய தின விருது விழாவில் மொத்தம் 511 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
பட்டியலில் முதலிடம் பெற்றவர் திரு பிள்ளை, 85, என்பது குறிப்பிடத்தக்கது.
“அமெரிக்காவின் தலைசிறந்த அறிவாளிகளுக்கு நிகர்” என்று மறைந்த பிரதமர் லீ குவான் இயூவின் புகழாரத்தைப் பெற்றவர் திரு பிள்ளை.
இவர் நாட்டுக்கு ஆற்றிய பெரும் பங்கைச் சிறப்பித்துக் குடிமக்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் மிக உயரிய விருதைப் பெற்றார்.
அதிபர் ஆலோசகர் மன்றத் தலைவராக 2005ஆம் ஆண்டுமுதல் இவ்வாண்டு ஜனவரி வரை பொறுப்பு வகித்ததில் இவரே நீண்ட காலம் இப்பணியைச் செய்தவராக திகழ்கிறார்.
நிதி, தற்காப்பு மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சுகளில் நிரந்தரச் செயலாளராகவும் பணியாற்றிய திரு பிள்ளையைப் பற்றிய ஒரு மேற்கோளில், “அரசாங்கச் சேவையில் முன்னோடியாக இருந்ததுடன் நாட்டின் முன்னோடித் தலைவர்களுக்கும் நம்பிக்கைக்குரியவராக இருப்பவர் இவர்.
“நாட்டு கட்டமைப்பின் ஆரம்பக் காலக்கட்டத்தில் பல முக்கிய திட்டங்களைச் செயல்படுத்திவர் திரு பிள்ளை,” என்று குறிப்பிடப்பட்டது.
‘ஜிஐசி’, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றில் நிர்வாக இயக்குநராகவும் இவர் பணியாற்றினார். அத்துடன் ‘எஸ்ஐஏ’ விமான நிறுவனத்தின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.
நாட்டுப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அரசாங்க ஊழியர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட இவ்வாண்டு கிட்டத்தட்ட 5,000 பேருக்குத் தேசிய தின விருதுகள் வழங்கப்பட்டன.