நேற்று பெய்த கனமழையால் தீவின் சில பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஜூரோங் ஈஸ்ட், சுவா சூ காங் வட்டாரங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு போக்குவரத்து கடந்து செல்ல முடியாத நிலையில் இருந்தது.
சேறு கலந்த பழுப்பு நிற நீரில் வாகனங்கள் செல்வதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பேருந்து நிறுத்தம் ஒன்றில் பயணிகளின் கணுக்கால் வரையில் தண்ணீர் இருந்ததை ஒரு காணொளி காட்டியது. டிசம்பர் மாதத்தின் முதல் பாதியில் வழக்கத்தைவிட கூடுதல் மழை பொழிவை எதிர்பார்க்கலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப் பகுதிகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு ‘பியுபி’ கேட்டுக்கொண்டுள்ளது.