தோ பாயோவின் ஒரு பரபரப்பான சாலையில் மிகவும் ஆபத்தான முறையில் சாலையைக் கடந்த சிறுமி

பரபரப்பான சாலை ஒன்றில் சிவப்பு விளக்கு சமிக்ஞையையும் பொருட்படுத்தாமல் பேருந்து ஒன்றைப் பிடிக்க சிறுமி ஒருவர் மிகவும் ஆபத்தான முறையில் ஓடிச் சென்று சாலையைக் கடப்பதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. 

தோ பாயோ லோரோங் 4ல் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 30) பிற்பகல் 2.26 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

 

சாலையின் மையத் தடுப்பிலிருந்து சாலையோரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு அந்தச் சிறுமி செல்ல முயற்சி செய்வதையும் பல வாகனங்கள் அந்தச் சாலையில் செல்வதால் அவர் கடக்க முடியாமல் தவிப்பதையும் காணொளி காட்டியது. 

இந்தக் காணொளியை ஸ்டோம்ப் செய்தி இணையப் பக்கத்துக்கு அனுப்பிய வாசகர் தானும் தனக்கு இடப்பக்கம் சென்ற பேருந்தின் ஓட்டுநரும் தங்களது வாகனங்களை நிறுத்தியதையடுத்து, அந்தச் சிறுமி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு ஓடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமி சாலையைக் கடப்பதற்காக திடீரென்று தாம் வாகனத்தை நிறுத்தியதாகக் கூறிய அவர், பின்னாலிருந்த வாகனங்கள் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் என்று கூறியதுடன், அந்தச் சிறுமி தனியாகச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சாலையின் ஒருபுறத்திலிருந்து சாலையின் மையப் பகுதிவரை சிறுமி சாலையைக் கடப்பதும் மையப் பகுதியில் உள்ள திண்டு வழியாகவே ஓடிச் செல்லும் சிறுமி எஞ்சியிருக்கும் மறுபாதி சாலையைக் கடக்க பலமுறை முயற்சி செய்வதையும் காணொளி காட்டுகிறது.

ஒரு பேருந்து, ஒரு கார் நின்று சிறுமிக்கு வழிவிடுவதும் காணொளியில் தெரிகிறது.

அவ்விரு வாகனங்களுக்குப் பின்னாலிருந்து இரு சக்கர வாகனம் சென்றிருந்தாலும் அது சிறுமிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity