சிங்கப்பூரிலிருந்து விடைபெறும் ‘சாசா'; வேலையிழக்கும் ஊழியர்கள்

சிங்கப்பூரில் உள்ள ‘சாசா’ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 22 சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்படும் என்று ஹாங்காங்கைச் சேர்ந்த அந்த நிறுவனம் நேற்று அறிவித்தது. இதனால் அதன் 170 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். 

தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக வர்த்தகத்தை மேம்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டும், சிங்கப்பூரில் உள்ள ‘சாசா’ கடைகள் லாபம் ஈட்டவில்லை என்பதால் வேறு வழியின்றி அவற்றை மூட முடிவு எடுக்கப்பட்டது என்றும் அந்நிறுவனம் கூறியது.

“சிங்கப்பூர் சந்தையின் செயலாற்றலை மேம்படுத்த, அண்மைய ஆண்டுகளாக உள்ளூர் நிர்வாகக் குழுவை மறுவடிவமைத்தல், கடைகளில் பொருட்களைக் காட்சிப்படுத்துதலை கவர்ச்சியாக்குதல் என்ற நிர்வாகம் எடுத்த பல முயற்சிகளும் நல்ல பலனை அளிக்கவில்லை,” என்று ‘சாசா’ தனது அறிக்கையில் விவரித்தது.

செம்டம்பர் மாதம் 30ஆம் தேதி முடிய சிங்கப்பூரில் உள்ள ‘சாசா’ கடைகளின் வருமானம் $173.3 மில்லியனாக இருந்தது. இது கடந்த ஆண்டு விகிதத்தை விட 4.6% குறைவு. 

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு விதிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட 170 ஊழியர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் ‘சாசா’ நிர்வாகம் தெரிவித்தது.

“சிங்கப்பூரில் சாசாவின் செயல்பாடு நிறுத்தப்படுவதால், குழுமத்தின் செயல்முறைகளில் பாதிப்பு ஏற்படாது,” என்று குறிப்பிட்ட அந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 265 கடைகளில் 22 மட்டும்தான் சிங்கப்பூரில் இயங்கு கின்றன,” என்றும் கூறியது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity