நிறுவனங்களின் நம்பிக்கை மேம்பட்டு வருகிறது

சிங்கப்பூர் நிறுவனங்களின் நம்பிக்கை மேம்பட்டு வருகிறது. உலகின் இரு பெரிய பொருளியல் நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் பூசல் நிலவியதால் இவ்வாண்டின் பெரும்பாலான பகுதிகளில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இருந்தாலும் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தக நம்பிக்கை சற்று மேம்பட்டு (+5.31%) வலுவடைந்துள்ளது.

இவ்வாண்டின் நான்காவது காலாண்டில் இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வர்த்தக நம்பிக்கை (+4.82) குறைந்திருந்தது. இதிலிருந்து மீண்டு அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் நம்பிக்கை மேம்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் வர்த்தக இலாகா நேற்று வெளியிட்ட வர்த்தக நம்பிக்கை குறியீட்டு ஆய்வு அறிக்கையில் தெரிவித்தது.

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் (+7.19%) நம்பிக்கை குறியீட்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தக நம்பிக்கை குறைவாக இருந்ததாக  அறிக்கை சுட்டிக்காட்டியது.

“2019ஆம் ஆண்டு முழுவதும் உள்ளூர் நிறுவனங்கள் மந்த நிலையைச் சந்தித்தாலும் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அவர்களுடைய எண்ணத்தில் மேம்பட்ட மாற்றம் ஏற்படும்,” என்று சிங்கப்பூர் வர்த்தக கடன் இலாகாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆட்ரி சியா தெரிவித்தார். சேவைத் துறையும் நிதித் துறையும் அதிக நம்பிக்கையோடு காணப்படுகின்றன. கட்டுமானத் துறை, ஒட்டுமொத்த விற்பனை, உற்பத்தித் துறை ஆகியவற்றில் மந்தநிலை தென்படுகிறது.

உலகப் பொருளியல் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருப்பதால்  அதிகரித்து வரும் போட்டி, உயர்ந்து வரும் வர்த்தகச் செலவுகள் போன்ற சவால்களை  நிறு வனங்கள் எதிர்நோக்குவதாக சிங்கப்பூர் வர்த்தக இலாகா மேலும் தெரிவித்தது.