100 மீட்டருக்கு மேல் போலிஸ்காரரை இழுத்துச் சென்ற மசராட்டி காரின் உரிமையாளர் குற்றவாளி என தீர்ப்பு

போலிஸ் அதிகாரியை 100 மீட்டருக்கும் அதிகமான தூரம் இழுத்துச் சென்ற மசராட்டி கார் ஓட்டுநரான லீ செங் யான் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 

கடந்த 2017ல் பிடோக் ரிசர்வோர் சாலையில் நடந்த அந்தச் சம்பவத்தில் போலிஸ் அதிகாரிக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்தது உட்பட இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு.

ஐந்து நாள் விசாரணைக்குப் பின்னர், விபத்துக்குப் பின்னர் காரை நிறுத்தாமல் சென்றது, நீதிக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட மேலும் ஒன்பது குற்றச்சாட்டுளில் லீ குற்றவாளி என்று மாவட்ட நீதிபதி இங் பெங் ஹொங் அறிந்தார்.

35 வயது சிங்கப்பூரரான லீ, இணைய சூதாட்டம், சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்ற விஷயங்களுடன் தொடர்புடைய மேலும் 59 குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார். இவை தொடர்பான வழக்கு பின்னொரு தேதியில் நடைபெறும்.

மசராட்டி காரின் உரிமையாளரான லீ, முந்தைய போக்குவரத்து குற்றங்களுக்காக வாகனம் ஓட்ட  தடை இருந்தபோதிலும் 2017 நவம்பர் 17ஆம் தேதி அன்று காரை ஓட்டியதாகக் கூறப்பட்டது.

சம்பவம் நடந்தபோது வாகனத்திற்கான கட்டாய மூன்றாம் தரப்பு ஆபத்து காப்பீடும் அவரிடம் இல்லை.

லீ இருக்கை வார் அணியாமல் இருந்ததால் ஸ்டாஃப் சார்ஜென்ட் கைருலன்வர் அப்துல் கஹார், 26,  பிடோக் ரிசவாயர் சாலையில் லீயின் வெள்ளை மசராட்டி காரை இரவு 9.20 மணியளவில் நிறுத்தினார்.

அவர் தனது மோட்டார் சைக்கிளை மசராட்டிக்கு முன்னால் நிறுத்திவிட்டு கீழே இறங்கி, லீயிடம் பேச காரை அணுகினார். 

சன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கிய லீ அதிகாரிக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக  தனது மசராட்டி காரைத் திருப்பி சம்பவ இடத்திலிருந்து வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த போலிஸ்காரரின் சட்டை ஒட்டுநர் இருக்கை அருகே இருந்த கதவில் சிக்கிக்கொண்டது. 

மணிக்கு 79  முதல் 84 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற கார் 100 மீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு போலிஸ்காரரையும் இழுத்துச் சென்றது. பிறகு அந்த போலிசார் கீழே விழுந்தார். மசராட்டி கார் வேகமாகச் சென்றுவிட்டது என்று அரசு துணை வழக்கறிஞர் திமோதியஸ் கோ நீதிமன்றத்தில் கூறினார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஸ்டாஃப் சார்ஜென்ட் கைருலன்வருக்கு வலது முழங்கால், கழுத்து, இடுப்புப் பகுதிகளில் ஏற்பட்ட வலிக்காக சிகிச்சை பெற்றார். அவருக்கு 20 நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

விபத்துக்குப் பின்னர் லீ மசராட்டி காரை அல்ஜுனிட் சாலைக்கு அருகே வில்லோ அவென்யூவில் விட்டுச் சென்றுள்ளார். பின்னர் தனது நண்பர் ஜெஃப் சானிடம் விபத்துக் குறித்து தெரிவித்தார். லீயை சரணடையச் சொன்னதாக திரு சான் நீதிமன்றத்தில் கூறினார். அன்று இரவு 2 மணி அளவில் போலிசார் லீயை சானின் வீட்டில் கைது செய்தனர்.

விசாரணையில் விபத்து நடந்தபோது மசராட்டியை தாம் ஓட்டவில்லை என்று லீ கூறியிருந்தார்.  லீக்கு ஜனவரி மாதம் தண்டனை விதிக்கப்படும். போலிஸ் அதிகாரிக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்துக்கு லீக்கு 15 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity