டாக்சி மோதியதில் 65 வயது மூதாட்டி மரணம்

கடைசி பேருந்தைப் பிடிக்க சாலையை கடந்தபோது 65 வயது திருவாட்டி டே கியாட் எங்கை டாக்சி மோதியது. 

பகுதிநேர கேஎஃப்சி ஊழியரான அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வழியில் உயிரிழந்தார்.

உட்லண்ட்ஸ் சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா சாலையில், நவம்பர் 27ஆம் தேதி அதிகாலை 12.28 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் 69 வயதான டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் போலிசார் தி நியூ பேப்பரிடம் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகத் தெரிவித்த போலிஸ்,  திருவாட்டி டேயின் நான்கு பிள்ளைகளில் இளையவரான திரு ரிச்சர்ட் போ, 29, சம்பவத்தைப் பார்த்தவர்கள் சாட்சியமளிக்க முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறியது.

மெல்பர்னில் படித்துவரும் திரு போ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது கடைசியாக தனது தாயை மதிய உணவு வேளையில் சந்தித்தார்.

தாயார் இறந்த செய்தி கிடைத்ததும் உடனடியாக சிங்கப்பூர் திரும்பிய திரு போ, “தகவல் கிடைத்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். நான் அவருடன் போதிய நேரம் செலவிடவில்லை. பட்டம் பெற்ற பிறகு அவரைக் கவனித்துக்கொள்ள என்னால் இங்கு திரும்பி வரமுடியாமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது,” என்றார்.

டாக்சி ஓட்டுநரின் பணியமர்த்தல் ஒப்பந்தம் ரத்து செய்யப்டட்டது என்றும் விசாரணையில் போலிசுக்கு உதவுவதாகவும் கம்ஃபோர்ட்டெல்குரோ குழுமத்தின் தலைமை நிறுவன தொடர்பு அதிகாரி திருமதி டாமி டான் தெரிவித்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity