கொண்டோமினியம் ஒன்றின் உயர்மாடியிலிருந்து மதுப்புட்டி ஒன்றைக் கீழே போட்டதில் விநியோக ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரூ கோஸ்லிங், அந்தச் சம்பவத்தின்போது மற்றொரு பெண்ணுக்கும் காயம் விளைவித்ததாக அவர்மீது நீதிமன்றத்தில் புதிய குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய குற்றம் ‘சமய ரீதியில் சினமூட்டும்’ செயல் என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
கருவிமூலம் கடுமையான காயம் விளைவித்ததாக முன்பு அவர்மீது குற்றச்சாட்டு பதிவாகியிருந்தது.
ஸ்பாட்டிஸ்வுட் பார்க் ரோட்டில் இருக்கும் 35 மாடிகள் கொண்ட அந்த கொண்டோமினியத்தில் கருவி ஒன்றைக் கொண்டு திருவாட்டி மனிஷா எனும் பெண்ணைக் காயப்படுத்தியதாக காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையான 47 வயதான கோஸ்லிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி இரவு 8.30 மணி வாக்கில் ‘ஸ்பாட்டிஸ்வுட் 18’ கொண்டோமினியத்தின் ஏழாவது மாடி மின்தூக்கி தளத்திலிருந்து ஐந்தாவது மாடியில் ‘பாபிக்யூ’ பகுதிக்கு அருகில் உள்ள மேசை ஒன்றை நோக்கி மதுப் புட்டியை கோஸ்லிங் எறிந்ததாகக் கூறப்பட்டது.
அந்தப் புட்டி திருவாட்டி மனிஷா மீது விழுந்ததில் அவரது வலது தோளில் காயமடைந்ததாகக் கூறப்பட்டது. அந்தப் புட்டி பின்னர் நசியாரி சுனீ எனும் விநியோக ஓட்டுநரின் தலையில் விழுந்ததால் அவரது மண்டையோடு உடைந்து, பின்னர் உயிரிழந்தார்.
உறவினர் ஒருவரின் வீட்டு புதுமனை புகுவிழாவுக்குச் சென்றிருந்த அந்த 73 வயது ஓட்டுநர் சாப்பிட எத்தனித்தபோது அவரது தலையில் புட்டி விழுந்தது.
திரு நசியாரி கீழே விழுவதற்கு முன்பாக இரண்டு முறை சத்தம் கேட்டதாக அவரது மூத்த மகளான திருவாட்டி நாஸ் சுரியாட்டி நசியாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திரு நசியாரியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பாக தாதியாகப் பணிபுரியும் அவரது உறவினர் ஒருவர் அவருக்கு முதலுதவி செய்தர்.
சிகிச்சை அளித்தபோது மூன்று முறை திரு நசியாரியின் இதயத்துடிப்பு நின்று போனதாகக் கூறிய திருவாட்டி நாஸ் சுரியாட்டி, 44, நான்காவது முறை இதயத்துடிப்பு நின்றால் மீண்டும் இதய இயக்க மிட்பு சிகிச்சை செய்ய வேண்டாமென முடிவெடுத்ததாகக் கூறினார்.
ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திரு நசியாரியின் ரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்து காலை 9 மணியளவில் உயிரிழந்தார்.
போலிசார் மேற்கொண்ட விசாரணையில் கோஸ்லிங் கைது செய்யப்பட்டார். அவர் அந்த கொண்டோமினியத்தில் வசிப்பவரா என்பது பற்றி ஆவணங்கள் ஏதும் குறிப்பிடவில்லை.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய கோஸ்லிங் மீதான மனநலப் பரிசோதனையை தனியார் மருத்துவர் ஒருவர் செய்து முடித்திருப்பதாகவும் இந்த வாரத்துக்குள் அந்த அறிக்கை கிடைக்கும் என்றும் அவரது வழக்கறிஞர் குளோரியா ஜேன்ஸ் சிவெட்டா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கோஸ்லிங்குக்கு பிணை அளிக்கப்படவில்லை. அடுத்த மாதம் 2ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தொடரும்.
கருவிமூலம் கடுமையான காயம் விளைவித்த குற்றவாளிகளுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படிகள் போன்றவை விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity