பேரங்காடியில் பணிபுரிந்த ஒருவர் வேலை நேரத்தின்போது கழிவறையில் தூங்கியதற்காக அவரது சக பணியாளர் திட்டினார். அதற்குப் பழிதீர்க்க, அவர் குடிக்கவிருந்த பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்தார் நித்திய குமரன் அழகப்பன், 26.
பானத்தில் ஏதோ நச்சின் வாசம் வீசுவதை உணர்ந்த அந்தப் பணியாளர், அதைக் குடிக்கவில்லை.
மலேசிய நாட்டவரான நித்திய குமரனுக்கு இன்று நீதிமன்றத்தில் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விஷம் வைத்து துன்பம் விளைவிக்க முற்பட்டதாக ஒரு குற்றச்சாட்டை அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்டார்.
சிராங்கூன் பகுதியில் உள்ள நெக்ஸ் கடைத்தொகுதியில் என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் நித்திய குமரனும் அவரது சக பணியாளரும் சில்லறை விற்பனை உதவியாளர்களாக வேலை செய்தனர். இருவரும் உறவினர்கள் என்று ‘டுடே ஆன்லைன்’ குறிப்பிட்டது.
நித்திய குமரனின் சக பணியாளரின் பெயர் நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படவில்லை.
இவ்வாண்டு ஜூன் 15ஆம் தேதி, அப்பேரங்காடியில் தூங்கியதற்காக நித்தியவை அந்தப் பணியாளர் திட்டினார். இது நித்திய குமரனைக் கோபமடையச் செய்தது.
அதே நாளன்று, அப்பேரங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து, அந்தப் பணியாளர் மேசையில் விட்டுச் சென்ற பாலில் கலந்தார்.
பின்னர் அந்தப் பாலை அருந்த வந்த அப்பணியாளர், அதிலிருந்து நச்சுத்தன்மை வாசம் வீசுவதை உணர்ந்து அதைக் குடிக்கவில்லை.
தமக்குத் தெரியாமல் தாம் அருந்தவிருந்த பானத்தில் யாரோ வேறொரு பொருளைக் கலந்துவிட்டதாக அந்தப் பணியாளர் போலிசிடம் புகார் அளித்தார்.
பரிசோதனைக்காக அந்தப் பால் சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. அந்தப் பாலில் malathion எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டு இருந்ததாக கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நித்திய குமரனுக்கு தண்டனை விதிப்பதில், பூச்சிக்கொல்லி மருந்தைத் திருடியதாக கூடுதல் குற்றச்சாட்டு ஒன்றும் கருத்தில் கொள்ளப்பட்டது.
விஷம் வைத்து துன்பம் விளைவிக்க முற்பட்டதற்காக அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity