கேலாங் சாலை நடுவில் சண்டை; ஐவர் கைது

லோரோங் 1 கேலாங்கில் சண்டையில் ஈடுபட்டதாக ஐந்து ஆடவர்களை போலிசார் நேற்று கைது செய்தனர்.

 சண்டையில் ஈடுபட்ட ஆடவர்கள் 21 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் என போலிஸ் அறிக்கை குறிப்பிட்டது.

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட 50 வினாடி காணொளியில் சுமார் 10 ஆடவர்கள், இளஞ்சிவப்பு உடையில் இருந்த ஒரு பெண் ஆகியோர் சாலையில் சண்டைபோடுவது காணப்பட்டது. அதனைப் பலர் வேடிக்கை பார்ப்பதும் காணொளியில் தெரிந்தது. 

பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பகுதியில் அவர்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் வண்ண இருக்கைகளால் தாக்கிக் கொள்வதைக் காணொளி காட்டியது.

“என்னுடைய கணவரை நீ அடித்துவிட்டாய்!” என்று பொருள்படும் விதத்தில் அந்தப் பெண்மணி மேண்டரின் மொழியில் கத்தியது கேட்டது.

நேற்று இரவு சுமார் 11.40 மணியளவில் இது குறித்து போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் சண்டையில் பங்கேற்றவர்களை நான்கு மணி நேரத்துக்குள் பிடித்தனர்.

நேற்றிரவு இவர்கள் ஒரு உணவகத்திலும் பிரச்சினையில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சண்டையில் ஈடுபடுபவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity