நேர்த்தியான நிதி அறிக்கையை நகர மன்றங்கள் சமர்ப்பித்தன

நேர்த்தியான நிதி அறிக்கையை நகர மன்றங்கள் சமர்ப்பித்தன

2 mins read
6410ebe2-e4b9-41a4-b2f5-094bd5deb806
பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்றம் உட்பட அனைத்து 16 நகர மன்றங்களும் இந்த ஆண்டு தேசிய வளர்ச்சி அமைச்சுக்கு நேர்த்தியான நிதி அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. கோப்புப்படம்: எஸ்டி -

பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்றம் உட்பட அனைத்து 16 நகர மன்றங்களும் இந்த ஆண்டு தேசிய வளர்ச்சி அமைச்சுக்கு நேர்த்தியான நிதி அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்றம் முதல் முறையாக நேர்த்தியான கணக்குகளை அனுப்பியுள்ளதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

கடந்த 2018 ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான நகர மன்ற நிர்வாக அறிக்கையை நேற்று அமைச்சு வெளியிட்டது.

எனினும், பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சில்வியா லிம், லோ தியா கியாங் ஆகிய இருவரும் நகர மன்றத்தின் நிதி விவகாரங்களில் இருந்து தங்களைத் தாங்களே விலக்கிக்கொள்ளத் தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த நகர மன்றத்திடம் அமைச்சு கேட்டுள்ளது.

நகர மன்றத்தின் பதிலைப் பொறுத்து, பொதுமக்கள் பணம் முறையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யக் கூடுதல் ஒழுங்குமுறை நடவடிக்கை தேவையா என்பது குறித்து முடிவுசெய்யப்படும் என்று அமைச்சு கூறியது.

அமைச்சின் ஆண்டு அறிக்கை, குடியிருப்புப் பேட்டையின் தூய்மை, பராமரிப்பு, மின்தூக்கி செயல்பாடு, சேவை பராமரிப்புக் கட்டணங்களில் நிலுவை, நிறுவன நிர்வாகம் ஆகிய ஐந்து துறைகளில் நகர மன்றங்களை பாராட்டியுள்ளது. செயல்பாட்டின் அடிப்படையில் பச்சை, மஞ்சள் அல்லது சிவப்பு தரக் குறியீடுகள் வழங்கப்படுகின்றன.

இந்த முறை அல்ஜுனிட்-ஹவ்காங், ஜூரோங்-கிளமென்டி நகரமன்றங்கள் மட்டுமே தலா இரண்டு மஞ்சள் தரக் குறியீடுகளைப் பெற்றன. ஹாலண்ட்-புக்கிட் பஞ்சாங், தெம்பனிஸ் நகர மன்றங்கள் தலா ஒரு மஞ்சள் தரக் குறியீட்டைப் பெற்றன, மற்ற 12 நகர மன்றங்களும் அனைத்து குறிகாட்டிகளுக்கும் பச்சைத் தரக் குறியீடுகளைப் பெற்றன.

நகர மன்றங்களும் அவற்றின் கணக்குத் தணிக்கையாளர்களும் சமர்ப்பித்த அளவிடக்கூடிய புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில் நகர மன்றங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்றம் நிறுவன நிர்வாகத்தில் பச்சை தரக் குறியீட்டைப் பெற்றுள்ளது. இது ஒப்பந்த குத்தகைகளை வெளியிடுவது, அவற்றை வழங்குவது போன்றவற்றில் சட்டத்திற்கு ஏற்ப செயல்படுவதை இக்குறிகாட்டி மதிப்பிடுகிறது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அதன் கணக்குகளைச் சரிபார்க்க அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் 2016இல் அமர்த்திய கேபிஎம்ஜி கணக்குத் தணிக்கை நிறுவனத்தின் முயற்சிகள் இதற்கு காரணம் என்று அமைச்சு கூறியது.

இந்நகர மன்றம் தனது கடந்தகால கட்டுப்பாட்டு தோல்விகள், தணிக்கை புள்ளிகளை 24 மாத காலத்திற்குள் சரிசெய்ய கேபிஎம்ஜி உதவியது என்றும் இதற்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நிதியுதவி அளித்ததாகவும் அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.