48,000 பேரின் தகவல் திருட்டு; நிறுவனத்திற்கு $60,000 அபராதம்

48,000 பேரின் தகவல் திருட்டு; நிறுவனத்திற்கு $60,000 அபராதம்

2 mins read
815634e5-550a-438a-8d58-b61492c86b44
படம்: ஐஸ்டாக்போட்டோ -

மாணவர்கள், பெற்றோர், ஊழியர்கள் என கிட்டத்தட்ட 48,000 பேரின் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கத் தவறிய உள்ளூர் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றுக்கு $60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

'லெர்னஹோலிக்' என்ற நிறுவனம் உருவாக்கிய மென்பொருளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது தொடர்பில் நேற்று தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் 2016ஆம் ஆண்டில் நடந்த இச்சம்பவத்தின் ஆவணங்களை வெளியிட்டது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இங்குள்ள பள்ளிகளில் சில, வருகைப் பதிவைச் செய்கின்றன.

இதற்கென நிறுவனம் உருவாக்கிய மென்பொருள், போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் அதிலிருந்த தரவுகளை ஊடுருவிகள் திருடியதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் இந்தக் குறைபாடுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஆணையம் குறிப்பிட்டது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் பெயர் வெளியிடப்படவில்லை.

அது ஒரு தொடக்கக் கல்லூரி என்று மட்டும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குக் கூறப்பட்டது.

ஊடுருவல் சம்பவத்தில் கிட்டத்தட்ட 47,800 பேரின் பெயர்கள், அடையாள எண்கள், முகவரிகள், தொடர்பு எண்கள் ஆகிய விவரங்கள் திருடப்பட்டன.

அத்துடன் சுமார் 370 மாணவர்களின் மருத்துவத் தகவல்களும் திருடப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

வருகைப் பதிவில் ஏற்பட்ட சிக்கலைச் சரிசெய்ய நிறுவனம் ஒரு பாதுகாப்பு அம்சத்தை செயலிழக்கச் செய்தது. ஆனால் சிக்கலைச் சரிசெய்த பின்னர் மீண்டும் அப்பாதுகாப்பு அம்சத்தை நிறுவனம் இயக்கிடத் தவறிவிட்டது.

மறைச்சொல் அம்சமும் இதில் பாதிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

தரவு ஊடுருவல் தொடர்பில் 'சிங்ஹெல்த்' நிறுவனத்திற்கும் சுகாதார விவரங்களுக்கான ஒருங்கிணைந்த அமைப்புக்கும் ஆணையம் விதித்திருந்த ஒரு மில்லியன் அபராதத் தொகையை அடுத்து இப்போது மென்பொருள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகையே ஆக அதிகமானது.

இதற்கிடையே லெர்னஹோலிக்' நிறுவனம் அதன் இணையத்தளத்தை முடக்கிவிட்டதாக அறியப்படுகிறது.

அத்துடன் அதன் தொடர்பு எண்ணும் துண்டிக்கப்பட்டுவிட்டது.