1,600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி

பாலர் பள்ளிகளில் பயிலும் 1,600க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் $500,000க்கும் அதிகமான நிதியைத் திரட்டியுள்ளது.

பாலர் பள்ளி மாணவர்களுக்கான இந்த உதவித் தொகை கடந்த மாதத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 19 உதவித் தொகை அளிப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

இதுவரை 500 பாலர் பள்ளி மாணவர்களுக்கு WeCare @North west-Ready for School திட்டத்தின்கீழ் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. உதவித் தொகை பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் $100 பெறுமானமுள்ள பேரங்காடி பற்றுச்சீட்டும் $100 பெறுமானமுள்ள புத்தகக்கடை பற்றுச்சீட்டும் வழங்கப்படும். பள்ளிக்கூட, குடும்பச் செலவுகளைக் குறைக்க இந்த உதவித் தொகை உதவும்.

பாலர் பள்ளி கட்டண உதவித் திட்டம், குழந்தை பராமரிப்பு கழிவுக் கட்டணம் ஆகிய திட்டங்களின்கீழ் பலன் அடையும் பிள்ளைகளுக்கும் $750, அதற்கும் குறைவான தனிநபர் வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளை

களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

பாலர் பள்ளிகளில் பயிலும் 100 பிள்ளைகள் மார்சிலிங் சமூக மன்றத்தில் நேற்று உதவித் தொகையைப் பெற்றுக்கொண்டனர்.  

இந்த விழாவில் மனிதவள, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கலந்துகொண்டார்.

குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவது மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, பிள்ளைகளின் கல்விக்கு உதவி வழங்குவது அதிமுக்கியமானது என்றார் அவர்.

“சமுதாயத்தில் மேல் நிலைக்குச் செல்வது பற்றி கூறும்போது சமத்துவமின்மையைச் சமாளிக்கவும் நமது பிள்ளைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துத்  தரவும் கல்விதான் முக்கிய தூண் என்று நான் நம்புகிறேன்,” என்றார் மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி ஆலோசகருமான திரு ஸாக்கி.