ஃபேரர் சாலை எம்ஆர்டி நிலையத்துக்கு வெளியே உள்ள கூரையுள்ள நடைபாதையில் கார் மோதியதில் 49 வயது பெண் மாண்டார்.
இந்த விபத்து நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
குவீன்ஸ்வேயை நோக்கிச் செல்லும் ஃபேரர் சாலையில் பாதசாரியை கார் மோதியதாகவும் விபத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அதிகாலை 6 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் அப்பெண் மாண்டு விட்டதாக அறிவித்தனர்.
அபாயகரமான முறையில் காரை ஓட்டிய குற்றத்துக்காக 24 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வழியாக கார் ஓட்டிச் சென்றுகொண்டிருந்த ஒருவர் காரின் கட்டுப்பாட்டை இழந்து கூரையுள்ள நடைபாதைக்குள் காரைச் செலுத்தியதாக சீனமொழி நாளிதழான வான்பாவ் தெரிவித்தது.
அப்போது அந்த இடத்தில் இருந்த பெண் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படு கிறது. மாண்ட பெண் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் என்று தெரிவிக்கப்பட்டது.
ஃபேரர் சாலை எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள எம்பிரஸ் மார்க்கெட்டில் காய்கறி வாங்க அவர் சென்றுகொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருவதாகவும் அவரது இரண்டு மகன்களும் பிலிப்பீன்சில் இருப்பதாகவும் வான்பாவ் நாளிதழ் தெரிவித்தது. விபத்து குறித்து தகவல் அறிந்தோர் 1800-255-0000 எனும் தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.