சாங்கி விமான நிலைய கிரவுன் பிளாசா ஹோட்டலில் பணியாற்றும் 28 வயது மணி தேவன், ஆகஸ்ட் 29ஆம் தேதி பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பத் தயாரானார். ஆனால் விடியற்காலை 2.00 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் உதவி ேகட்டு கவலையுடன் அணுகியபோது அவரால் தட்டிக்கழிக்க முடியவில்லை.
அந்த வாடிக்கையாளரின் மகன் ஹோட்டலில் உள்ள படுக்கை மீது ஏறி விளையாடியபோது கீழே விழுந்ததால் முழங்கையில் காயம் ஏற்பட்டது. உடனே சக்கர நாற்காலிக்கு ஏற்பாடு செய்த அவர் சாங்கி விமான நிலையம் 3ல் உள்ள மருந்தகத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர் இல்லாததால் மீண்டும் கேகே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை முடியும்வரை விடியற்காலை 4.00 மணி வரை அவர்களுடன் இருந்து தேவையான உதவிகளை அவர் செய்தார்.
இவரது இந்தச் சேவையைப் பாராட்டி கடந்த வியாழக்கிழமை அன்று விருது வழங்கப்பட்டது. ஷோங்ஷான் பார்க்கில் உள்ள வின்டாம் சிங்கப்பூரில் நடைபெற்ற 25வது தேசிய கனிவன்பு, சேவை விருது வழங்கும் நிகழ்ச்சியில் மணி தேவன் உட்பட வரவேற்பு, உபசரிப்புத் துறையில் சிறந்து விளங்கிய 147 பேருக்கு விருது வழங்கப்பட்டது.