முன்னாள் கைதிகள் தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மீண்டும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலவச திறன்பேசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 30 பேருக்கு இலவச திறன்பேசி வழங்கப்பட்டுள்ளது.
‘Project Give a Line, Change a Life’ என்ற அந்த புதிய திட்டம் சாங்கியில் உள்ள செலராங் மறுவாழ்வு இல்லத்தில் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னாள் கைதிகள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் திறன்பேசி திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.
முன்னாள் கைதிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் உதவி செய்து வரும் லாப நோக்கற்ற தொழிலியல் மற்றும் சேவைகள் கூட்டுறவு நிலையத்தின் (இஸ்கோஸ்) முயற்சியில் திறன்பேசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திறன்பேசியில் இஸ்கோஸின் செயலியும் நிறுவப்பட்டுள்ளது. இதனால் இஸ்கோஸ் வழங்கும் பலதரப்பட்ட சேவை விவரங்களை செயலி வழியாக முன்னாள் கைதிகள் அறிய முடியும்.
இஸ்கோஸ், 2020ஆம் ஆண்டுக்குள் 500 இலவச திறன்பேசிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.