தனது வாகனத்தில் கைபேசியை விட்டுச் சென்ற பயணியிடம் அதைத் திரும்ப ஒப்படைக்காமல் அதைக் கொண்டு தனக்குத் தானே 5 நட்சத்திர மதிப்பீடு கொடுத்துக் கொண்ட ‘கிராப்’ ஓட்டுநர் எல்வின் எங் லியங் டொங்குக்கு நேற்று $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. 2017ல் செப்டம்பர் 9ஆம் தேதியன்று காலையில் 28 வயது பெண் பயணியைத் தன் ‘கிராப்’ வாகனத்தில் ஏற்றிய எங், பயணி இறங்கியதும் பின் இருக்கையில் கைபேசியை விட்டுச் சென்றுவிட்டதை உணர்ந்தார்.
பயணியின் கைபேசியில் இருந்த ‘கிராப்’ செயலியில் ஓட்டுநரை மதிப்பிடும் அம்சம் வழி எங், தன்னைத் தானே மதிப்பிட்டுக் கொண்டதாகவும் கைபேசியைத் திரும்பத் தருவது அலைச்சல் என்பதால் அதைத் தூக்கி எறிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. கைபேசியைக் காணாமல் அதன் உரிமையாளர் வேறொரு கைபேசியைக் கொண்டு தமது ‘கிராப்’ செயலியைப் பார்த்ததில் அந்த ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைக் கண்டார். எங் தமது கைபேசியை எடுத்துள்ளதாக சந்தேகித்து ‘கிராப்’ மற்றும் போலிசாரிடம் புகார் அளித்தார். இதன் தொடர்பில் அபராதத்துடன் கைபேசியின் உரிமையாளரிடம் நஷ்ட ஈடாக $500 கட்டவும் எங்குக்கு உத்தரவிடப்பட்டது. வேறொரு சம்பவத்தில் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் வேலை செய்யும் காசாளருக்குச் சேவை உன்னத விருது வழங்கப்பட்டதில் எரிச்சலடைந்த எங், ஃபேஸ்புக்கில் தகாத கருத்துகளைப் பதிவிட்டிருந்ததாகவும் ‘சிஎன்ஏ’ தெரிவித்தது.