சுடச் சுடச் செய்திகள்

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 24 ஆடவர்கள் கைது

கேலாங் ரோட்டில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் தொடர்பில் 24 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிடோக் போலிஸ் பிரிவு, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் ஆகிய முத்தரப்பின் கூட்டு சோதனை,   ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்டது.

இதில் கைதானவர்களின் வயது 22 முதல் 63 வரை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிக்கியவர்களில் 26 வயதுடைய ஆடவர் ஒருவர், குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததன் தொடர்பில் கைதானதாகவும் மற்ற 23 பேரும் பொது சூதாட்ட சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அவர்களிடமிருந்து சுமார் $3,100 ரொக்கமும் சூதாட்டத்திற்குத் தேவையான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் போலிசார் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

கைதானவர்களில் நால்வர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்கிறது. இதற்கிடையே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸ் அறிக்கை தெரிவித்தது.